சென்னையில் உச்சநீதிமன்றத்தின் பிராந்திய அமர்வு – பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம்!
சென்னையில் உச்சநீதிமன்றத்தின் பிராந்திய அமர்வை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை தமிழக முதல்வர் ஜோசப் விஜய் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு அவர் கடிதம் எழுதியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல்வர் தனது கடிதத்தில், உச்சநீதிமன்றத்தை அணுகுவதற்காக தென்னிந்திய மக்கள் டெல்லிக்குப் பயணம் செய்ய வேண்டியிருப்பதால், பயணச் செலவு மற்றும் தொலைவு காரணமாகப் பலரும் சிரமங்களைச் சந்திப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 130-வது பிரிவின்படி, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுடன் டெல்லிக்கு வெளியேயும் உச்சநீதிமன்றத்தை அமைக்க முடியும் என்பதைச் சுட்டிக்காட்டியுள்ளார். சென்னையில் பிராந்திய அமர்வு அமைக்கப்பட்டால் தமிழ்நாடு மட்டுமின்றி ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட தென்னிந்திய மாநில மக்களும் பயனடைவார்கள் எனத் தெரிவித்துள்ளார்.
இந்தக் கோரிக்கை 1980-ஆம் ஆண்டு முதலே வலியுறுத்தப்பட்டு வருவதாகவும், 2004, 2006, 2008 மற்றும் 2021-ஆம் ஆண்டுகளில் நாடாளுமன்ற நிலைக்குழுக்களும் பிராந்திய அமர்வுகள் அமைப்பது தொடர்பாகப் பரிந்துரைத்துள்ளதாகவும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். எனவே, இந்த விவகாரத்தை மீண்டும் பரிசீலித்து சென்னையில் உச்சநீதிமன்றக் கிளை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பிரதமரிடம் முதல்வர் விஜய் கோரிக்கை விடுத்துள்ளார்.
