செய்திகள்

தீபாவளி பாதுகாப்பு – சென்னையில் 18,000 போலீசார் கண்காணிப்பு தீவிரம்!

தீபாவளி பாதுகாப்பு – சென்னையில் 18,000 போலீசார் கண்காணிப்பு தீவிரம்!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் காவல்துறையினர் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளனர். வரும் நவம்பர் 8-ம் தேதி தீபாவளி கொண்டாடப்பட உள்ள நிலையில், புத்தாடைகள், பட்டாசுகள் மற்றும் இனிப்புகள் வாங்குவதற்காக முக்கிய வணிகப் பகுதிகளில் மக்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது.

இதையடுத்து, சென்னை பெருநகரம் முழுவதும் சுமார் 18,000 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். குறிப்பாக, தி.நகர், பாண்டிபஜார், புரசைவாக்கம், வண்ணாரப்பேட்டை, பூக்கடை, கோயம்பேடு, அண்ணாநகர் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் கூடுதல் போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், கூட்ட நெரிசலைக் கண்காணிக்க 25 தற்காலிக கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 205 கூடுதல் சிசிடிவி கேமராக்கள், ட்ரோன் கேமராக்கள் மற்றும் தற்காலிக காவல் கட்டுப்பாட்டு அறைகள் மூலமாகவும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி நடைபெறும் செயின் பறிப்பு, பிக்பாக்கெட் உள்ளிட்ட திருட்டுச் சம்பவங்களைத் தடுக்க சாதாரண உடையிலும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

குறிப்பாக, தி.நகர் ரங்கநாதன் தெரு உள்ளிட்ட பகுதிகளில் பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க தனிப்படைகளும் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், கூட்டத்தில் குழந்தைகள் காணாமல் போவதைத் தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பொதுமக்கள் பாதுகாப்பாகப் பொருட்கள் வாங்குவதற்கும், போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்துவதற்கும் இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.