சென்னையில் 86 டன் வெங்காயம் அழுகி வீணாகும் நிலை – லாரி ஓட்டுநர்கள் தவிப்பு!
சென்னை கொருக்குப்பேட்டையில் இருந்து கொண்டு செல்லப்பட்ட 86 டன் வெங்காயத்தை இறக்க முடியாமல் 4 லாரி ஓட்டுநர்கள் கடந்த 3 நாட்களாக தவித்து வருகின்றனர்.
ஒன்றிய அரசின் NAFED நிறுவனம் சார்பில் ரேஷன் கடைகளில் பொதுமக்களுக்கு குறைந்த விலையில் விற்பனை செய்வதற்காக வெங்காயம் கொள்முதல் செய்யப்பட்டது. ஆனால், வெங்காயம் தரமற்றதாக இருந்ததால் தமிழக அரசின் கூட்டுறவுத் துறை அதனை வாங்க மறுத்துவிட்டது.
இதையடுத்து, அந்த வெங்காயத்தை தனியாரிடம் விற்பனை செய்ய NAFED நிறுவனம் முயற்சி செய்துள்ளது. ஆனால், தரம் குறைவாக இருந்ததால் தனியார் வியாபாரிகளும் அதனை வாங்க முன்வரவில்லை எனக் கூறப்படுகிறது.
இதனால் கொருக்குப்பேட்டையில் இருந்து அலமாதிக்கு வெங்காயத்தை ஏற்றிச் சென்ற 4 லாரிகள், அவற்றை எங்கு இறக்குவது என்று தெரியாமல் கடந்த 3 நாட்களாக சாலையோரத்தில் நிறுத்தப்பட்டுள்ளன. லாரிகளில் இருந்த சுமார் 80 டன் வெங்காயம் முற்றிலும் அழுகிவிட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், அழுகிய வெங்காயத்தை எங்கு கொட்டுவது என்பது குறித்தும் அதிகாரிகள் உரிய வழிகாட்டுதல் வழங்கவில்லை என லாரி ஓட்டுநர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
அழுகிய வெங்காயத்தில் இருந்து புழுக்கள் வெளியேறுவதுடன், கடுமையான துர்நாற்றமும் வீசுவதால் லாரிகளுக்குள் அமரக்கூட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக ஓட்டுநர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
கடந்த 3 நாட்களாக உணவு மற்றும் ஓய்வின்றி அவதிப்படுவதாகக் கூறும் ஓட்டுநர்கள், இந்த விவகாரத்தில் அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்றும், அலட்சியமாகச் செயல்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
