அமெரிக்கா, சிங்கப்பூருக்கு பறக்கும் திருச்சி தீபாவளி பலகாரங்கள் – ஏற்றுமதி 30% அதிகரிப்பு!
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருச்சியில் தயாரிக்கப்படும் பாரம்பரிய இனிப்பு மற்றும் கார வகை பலகாரங்களுக்கு வெளிநாடுகளில் அதிக வரவேற்பு கிடைத்து வருகிறது. இதனால் இந்த ஆண்டு திருச்சி மாவட்டத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு அனுப்பப்படும் பலகாரங்களின் ஏற்றுமதி 30 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.

அமெரிக்கா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா மற்றும் சீஷெல்ஸ் உள்ளிட்ட நாடுகளுக்கு திருச்சியில் தயாரிக்கப்படும் இனிப்பு மற்றும் கார வகைகள் விமானம் மூலம் அனுப்பி வைக்கப்படுகின்றன. குறிப்பாக அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்கள் மத்தியில் பாரம்பரிய இனிப்புகள் மற்றும் நெய் பலகாரங்களுக்கு அதிக வரவேற்பு உள்ளது. டெக்சாஸ், நியூ ஜெர்சி, கலிபோர்னியா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து அதிக அளவில் ஆர்டர்கள் கிடைத்துள்ளன.
அதேபோல் சிங்கப்பூர் மற்றும் சீஷெல்ஸ் நாடுகளிலும் முறுக்கு உள்ளிட்ட பாரம்பரிய தின்பண்டங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. கடந்த வாரம் ஒரே நாளில் திருச்சியில் இருந்து சிங்கப்பூருக்கு மட்டும் 2.5 டன்னுக்கும் அதிகமான பலகாரங்கள் விமானம் மூலம் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.
வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் ஆன்லைன் மூலமாகவும் பலகாரங்களை ஆர்டர் செய்து கூரியர் மூலம் பெற்றுக்கொள்கின்றனர். மைசூர் பாக், பாதாம் அல்வா, நெய் லட்டு உள்ளிட்ட நெய் இனிப்புகள் கிலோ ரூ.600 முதல் ரூ.1,000 வரையிலும், பால்கோவா உள்ளிட்ட பால் இனிப்புகள் கிலோ ரூ.500-க்கும் அதிகமாகவும் விற்பனை செய்யப்படுகின்றன. முறுக்கு, மிக்சர் உள்ளிட்ட கார வகைகள் கிலோ ரூ.450 முதல் ரூ.1,800 வரை விற்பனை செய்யப்படுகின்றன.
மேலும், பலகாரங்கள் நீண்ட நாட்கள் கெட்டுப்போகாமல் இருக்க நவீன பேக்கேஜிங் தொழில்நுட்பமும் பயன்படுத்தப்படுகிறது. விமான சரக்குக் கட்டணம் அதிகமாக இருப்பது ஏற்றுமதியாளர்களுக்கு சவாலாக இருந்தாலும், வெளிநாடுகளில் அதிகரித்து வரும் தேவையால் திருச்சி பலகார ஏற்றுமதியாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
