“தலைமை தேர்தல் ஆணையரை உடனடியாக நீக்க வேண்டும்” – மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்றும், SIR எனப்படும் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளை நிறுத்த வேண்டும் என்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், SIR நடவடிக்கைகள் தொடர்பாக தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும், தேர்தல் ஆணையர்கள் சுக்பீர் சிங் சந்து மற்றும் விவேக் ஜோஷி ஆகியோர் கடந்த 10 மாதங்களில் 14 முறை ஆட்சேபனை தெரிவித்ததாக இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டிருப்பதை ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளார்.
வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்கம் உள்ளிட்ட விவகாரங்களில் மற்ற தேர்தல் ஆணையர்களுக்கு தெரியாமல் முடிவுகள் எடுக்கப்பட்டதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக நியாயமான விசாரணை நடத்த வேண்டும் என்றும், பொறுப்புக்குரியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இதனிடையே, தேர்தல் ஆணையம் இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளது. தேர்தல் ஆணையர்களுக்கு இடையிலான கருத்து வேறுபாடுகள் வழக்கமான ஆலோசனை செயல்முறையின் ஒரு பகுதிதான் என்றும், கடந்த ஓராண்டில் எடுக்கப்பட்ட அனைத்து உத்தரவுகளும் முழு ஆணையத்தின் ஒருமித்த முடிவுகளின் அடிப்படையிலேயே எடுக்கப்பட்டதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
