செய்திகள்

ஜெம் வீரமணி போக்சோ வழக்கு: சாந்தி, மகேந்திரன் ஜாமீன் மனு மீது செப். 29ல் விசாரணை!

ஜெம் வீரமணி போக்சோ வழக்கு: சாந்தி, மகேந்திரன் ஜாமீன் மனு மீது செப். 29ல் விசாரணை!

சிறுமிகள் பாலியல் அத்துமீறல் புகாரில் கைது செய்யப்பட்டுள்ள ஜெம் வீரமணிக்கு உடந்தையாக இருந்ததாகக் கூறப்படும் சாந்தி மற்றும் மகேந்திர சிம்ஹன் ஆகியோர் ஜாமீன் கோரி சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

இந்த மனுவில், 2019ஆம் ஆண்டு நடந்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக 6 ஆண்டுகள் தாமதமாக, 2025ஆம் ஆண்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த தாமதத்திற்கு காவல்துறை தரப்பில் உரிய விளக்கம் அளிக்கப்படவில்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் சிறுமிகள் யாரும் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்றும், சாட்சிகளின் வாக்குமூலங்கள் காவல்துறை வசம் இருப்பதால் அவற்றை கலைக்க வாய்ப்பில்லை என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கு காவல்துறை தரப்பில், பாதிக்கப்பட்ட சிறுமிகளின் விவரங்கள் மிகுந்த ரகசியத்துடன் பாதுகாக்கப்பட்டு வருவதாகவும், மனுதாரர்கள் நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டதில் எந்த தாமதமும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, சாந்தி மற்றும் மகேந்திர சிம்ஹனின் ஜாமீன் மனுக்கள் தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் வழங்கினார்.

இதையடுத்து, இருவரின் ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணையை செப்டம்பர் 29ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *