நாடு முழுவதும் ஒரே குரலில் ‘வந்தே மாதரம்’! ஒரு கோடி பேர் பங்கேற்க ஏற்பாடு
‘வந்தே மாதரம்’ பாடலின் 150வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, செப்டம்பர் 25ஆம் தேதி நாடு முழுவதும் ஒரே நேரத்தில் ஒரு கோடிக்கும் அதிகமானோர் ‘வந்தே மாதரம்’ பாடலைப் பாடும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
‘நமாமி பாரதம்’ என்ற பெயரில் வித்யா பாரதி அகில பாரதிய சிக்ஷா சன்ஸ்தான் சார்பில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களில் காலை 11 மணிக்கு மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் மற்றும் பொதுமக்கள் இணைந்து முழுமையான ‘வந்தே மாதரம்’ பாடலை ஒரே நேரத்தில் பாட உள்ளனர்.
‘ஒரே குரல் – ஒரே தீர்வு – ஒரே இந்தியா’ என்ற கருப்பொருளில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியின் மூலம், ‘வந்தே மாதரம்’ பாடலின் வரலாற்றுப் பயணம் மற்றும் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் அதன் பங்கு குறித்து இளைய தலைமுறையினருக்கு எடுத்துரைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
டெல்லியில் மட்டும் 300க்கும் மேற்பட்ட இடங்களில் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் அதிக எண்ணிக்கையிலானோர் ‘வந்தே மாதரம்’ பாடலைப் பாடும் நிகழ்வை ஆசியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் மற்றும் இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் சாதனைக்காக சமர்ப்பிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
