பால் விலை உயர்வால் அதிர்ச்சி! அன்புமணி காட்டம் !
தமிழ்நாட்டில் தனியார் பால் நிறுவனங்கள் பால் விலையை தொடர்ந்து உயர்த்தி வரும் நிலையில், ஆவின் நிறுவனத்தின் சந்தைப் பங்களிப்பு குறைந்துள்ளதே தனியார் பால் விலை உயர்வுக்கு முக்கிய காரணம் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் கடந்த 8 மாதங்களில் 3 முறை தனியார் பால் விலை உயர்த்தப்பட்டுள்ளதாகவும், தற்போது லிட்டருக்கு ரூ.4 வரை விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அன்புமணி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள கருத்தில், ஆவின் நிறுவனத்தின் பங்களிப்பு குறைந்து வருவதால் தனியார் பால் நிறுவனங்களுக்கு சந்தையில் அதிக இடம் கிடைத்துள்ளதாகவும், இதன் காரணமாகவே அவை தொடர்ந்து விலையை உயர்த்தி வருவதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், பொதுமக்களின் அன்றாட தேவைகளில் முக்கியமானதாக இருக்கும் பால் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது குடும்பங்களின் மாதாந்திர செலவில் கூடுதல் சுமையை ஏற்படுத்தும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆவின் நிறுவனத்தின் சந்தைப் பங்களிப்பை அதிகரிக்கவும், தனியார் பால் விலை உயர்வை கட்டுப்படுத்தவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
இதனால், தொடர்ந்து அதிகரித்து வரும் தனியார் பால் விலை உயர்வுக்கு தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
