அக்.11ல் சென்னை வருகிறார் பிரதமர் மோடி! பூந்தமல்லி–வடபழனி மெட்ரோ சேவை தொடக்கம் !
சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் 2-ம் கட்டத்தில் தயாராகியுள்ள பூந்தமல்லி பைபாஸ் – வடபழனி இடையேயான 14.6 கி.மீ. வழித்தடம் அக்டோபர் 11ஆம் தேதி திறக்கப்பட உள்ளது. இந்த மெட்ரோ சேவையை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பல மாதங்களாக பாதுகாப்பு மற்றும் ஒழுங்குமுறை அனுமதிகள் கிடைத்திருந்தாலும், இந்த வழித்தடம் பயணிகள் பயன்பாட்டுக்கு வராமல் இருந்தது. தற்போது பிரதமரின் சென்னை வருகையுடன் இதனை தொடங்குவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
பூந்தமல்லி பைபாஸ் முதல் வடபழனி வரை உள்ள இந்த வழித்தடத்தில் 11 உயர்மட்ட மெட்ரோ நிலையங்கள் இடம்பெற்றுள்ளன. இது சென்னை மெட்ரோ 2-ம் கட்டத்தின் முதல் பயணிகள் சேவைப் பகுதியாகும்.
இந்த புதிய வழித்தடம் பயன்பாட்டுக்கு வந்தால், பூந்தமல்லி, போரூர், வடபழனி உள்ளிட்ட பகுதிகளை இணைக்கும் மெட்ரோ போக்குவரத்து மேலும் விரிவடையும். ஏற்கனவே இந்த வழித்தடத்தில் பயணிகள் சேவையை தொடங்குவதற்கான பாதுகாப்பு அனுமதிகள் பெறப்பட்டுள்ளன.
மேலும், தொடக்க விழாவில் தமிழக முதலமைச்சர் விஜய் முன்னிலையில் பிரதமர் மோடி மெட்ரோ சேவையை தொடங்கி வைக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தொடக்க விழா மற்றும் பிரதமரின் பயணத் திட்டம் தொடர்பான இறுதி அதிகாரப்பூர்வ விவரங்கள் வெளியாகும் நிலையில் கூடுதல் தகவல்கள் தெரியவரும்.
