குழந்தைகளுக்கு தங்க மோதிரம்! “தாய்மாமன்” திட்ட வீடியோ வெளியீடு
அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கும் ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டத்தை செயல்படுத்துவதாக தவெக தனது தேர்தல் அறிக்கையில் அறிவித்திருந்தது.
ஆட்சிக்கு வந்த பின்னர், இந்தத் திட்டம் ஜூன் 22-ம் தேதி முதல் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. திட்டத்துக்காக ஆண்டுதோறும் ரூ.755.83 கோடி நிதி ஒதுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
தங்க மோதிரங்களை கொள்முதல் செய்வதற்கான டெண்டர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, ஜோய் ஆலுக்காஸ் மற்றும் கல்யாண் ஜூவல்லர்ஸ் நிறுவனங்களுக்கு பணி ஆணை வழங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், முதல்வர் விஜய் அரசு முறைப் பயணமாக லண்டன் சென்றிருந்ததால், செப்டம்பர் 15-ம் தேதி அறிஞர் அண்ணா பிறந்தநாளில் திட்டத்தை தொடங்க முடியவில்லை.
இதையடுத்து, மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டத்தை முதல்வர் விஜய் தொடங்கி வைக்க உள்ளார். இதற்காக மதுரை செல்லும் அவர், முதலில் மீனாட்சி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு, ராஜாஜி மருத்துவமனைக்கு செல்கிறார். அங்கு 25 குழந்தைகளுக்கு நேரடியாக தங்க மோதிரம் அணிவிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல்வரின் மதுரை வருகையையொட்டி 4,000 காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டம் தொடர்பான வீடியோவை தமிழக அரசு தற்போது வெளியிட்டுள்ளது.
