செய்திகள்

பேருந்து வசதி இல்லை… தேர்வுக்கு தாமதம்! பெரம்பலூரில் பெண் தேர்வர்களுக்கு அனுமதி மறுப்பு !

பேருந்து வசதி இல்லை... தேர்வுக்கு தாமதம்! பெரம்பலூரில் பெண் தேர்வர்களுக்கு அனுமதி மறுப்பு !

தமிழகம் முழுவதும் இன்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) சார்பில் குரூப்-1 முதல்நிலைத் தேர்வு நடைபெற்று வருகிறது.

பெரம்பலூர் மாவட்டத்தில் 9 தேர்வு மையங்களில் மொத்தம் 2,250 தேர்வர்கள் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்தனர். இதில், சென்னை–திருச்சி தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள ஸ்ரீ சாரதா தனியார் மகளிர் கல்லூரி தேர்வு மையத்தில் 550 பேருக்கு தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், 431 பேர் மட்டுமே தேர்வு எழுத வந்த நிலையில், 119 பேர் தேர்வுக்கு வரவில்லை.

இந்த தேர்வு மையத்திற்கு தனி பேருந்து நிறுத்தம் மற்றும் நேரடி பேருந்து வசதி இல்லாததால், பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து பல தேர்வர்கள் ஷேர் ஆட்டோக்கள் மூலம் தேர்வு மையத்தை அடைந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், காலை 9 மணிக்குள் தேர்வு அறைக்குள் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்த நிலையில், வெளி மாவட்டங்கள் மற்றும் மாவட்ட எல்லைப் பகுதிகளில் இருந்து வந்த 5-க்கும் மேற்பட்ட பெண் தேர்வர்கள் காலதாமதமாக தேர்வு மையத்திற்கு வந்ததாக கூறப்படுகிறது.

தாமதமாக வந்ததால் அவர்களை தேர்வு மையத்திற்குள் அனுமதிக்க காவலர்கள் மறுத்தனர். இதையடுத்து, தேர்வு எழுத அனுமதிக்கக் கோரி தேர்வர்கள் காவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

ஆட்சியர் விளக்கம்

தேர்வு மையத்தில் ஆய்வு மேற்கொண்ட பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரிடம் இதுகுறித்து கேட்கப்பட்டது. அப்போது, காலதாமதமாக வரும் தேர்வர்களை தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கக் கூடாது என TNPSC சார்பில் தெளிவான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும், தேர்வர்கள் உரிய நேரத்திற்கு முன்னதாகவே தேர்வு மையங்களுக்கு வந்து சேர வேண்டும் என மாவட்ட நிர்வாகம் சார்பிலும் ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டிருந்ததாக கூறினார்.

இதனிடையே, தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள கல்வி நிறுவனங்களுக்கு பேருந்து நிறுத்தம் அமைப்பது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *