தினேஷின் அடுத்த சம்பவம் ஆரம்பம்! ‘பந்தா கேங்ஸ்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!
அறிமுக இயக்குநர் மதி ஆனந்த் இயக்கத்தில் நடிகர் வீ.ஆர். தினேஷ், கயல் ஆனந்தி, லிங்கேஷ் உள்ளிட்டோர் நடிக்கும் புதிய திரைப்படம் ‘பந்தா கேங்ஸ்’. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகியுள்ளது.

‘அட்டக்கத்தி’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் வீ.ஆர். தினேஷ். தொடர்ந்து ‘இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’, ‘குக்கூ’, ‘விசாரணை’ உள்ளிட்ட பல படங்களில் நடித்து கவனம் பெற்றார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ‘லப்பர் பந்து’ திரைப்படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.
இதையடுத்து, பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘வேட்டுவம்’ படத்திலும் தினேஷ் நடித்துள்ளார். இந்நிலையில், அவரது 26-வது திரைப்படமாக ‘பந்தா கேங்ஸ்’ உருவாகி வருகிறது.
இந்தப் படத்தில் கயல் ஆனந்தி, லிங்கேஷ், சுபா வரதராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். முழு நீள காமெடி படமாக உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
இந்நிலையில், நடிகர் வீ.ஆர். தினேஷின் பிறந்தநாளை முன்னிட்டு படக்குழு ‘பந்தா கேங்ஸ்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளது. ஃபர்ஸ்ட் லுக் தற்போது சமூக வலைதளங்களில் கவனம் பெற்று வருகிறது.
