ரஜினிகாந்த் இப்போது எனக்கு நண்பராகி விட்டார்.. ராஷி கன்னா!
கமல்ஹாசன் தயாரிப்பில், அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் புதிய திரைப்படம் ‘தர்மன்’. இந்தப் படத்தில் சிம்ரன், ராஷி கன்னா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், ரசிகர்களுடனான கலந்துரையாடலில் நடிகை ராஷி கன்னா, ரஜினிகாந்துடன் பணியாற்றிய அனுபவம் குறித்து பகிர்ந்துகொண்ட விஷயங்கள் கவனம் பெற்றுள்ளன.

ரஜினிகாந்துடன் இணைந்து நடித்த அனுபவம் எப்படி இருந்தது என்ற கேள்விக்கு பதிலளித்த ராஷி கன்னா, “ரஜினிகாந்துடன் பணியாற்றியது மிகவும் அற்புதமான அனுபவமாக இருந்தது. தற்போது அவர் எனக்கு நல்ல நண்பராகிவிட்டார்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், தான் எத்தனை கேள்விகள் கேட்டாலும் ரஜினிகாந்த் மிகவும் பொறுமையாகவும், எப்போதும் புன்னகையுடனும் பதிலளிப்பார் என்றும் அவர் கூறியுள்ளார். ரஜினிகாந்துக்கு நகைச்சுவை உணர்வு அதிகம் இருப்பதாகவும், தன்னை அடிக்கடி கேலி செய்து சிரிக்க வைப்பார் என்றும் ராஷி கன்னா தெரிவித்துள்ளார்.
அவருடன் நெருக்கமாக இருந்து பணியாற்றுவதன் மூலம் பல விஷயங்களை கற்றுக்கொள்ள முடிகிறது என்றும் ராஷி கன்னா குறிப்பிட்டுள்ளார். ரஜினிகாந்தின் அனுபவம், அணுகுமுறை மற்றும் பணிபுரியும் விதம் தனக்கு பல புதிய விஷயங்களை கற்றுக்கொடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, ரஜினிகாந்த் மற்றும் நடிகர் ராம் பொத்தினேனியுடன் ராஷி கன்னா நடைபயிற்சி மேற்கொண்ட புகைப்படமும் சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது. இந்தப் புகைப்படத்தை ரசிகர்கள் தற்போது ஆர்வத்துடன் பகிர்ந்து வருகின்றனர்.
