நாளை முதல் அமல்.. பெண்களுக்கு விரிவாகும் இலவச பேருந்து பயணம்!
தமிழ்நாட்டில் மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டம் ‘வெற்றிப் பயணம்’ என்ற பெயரில் நாளை, அக்டோபர் 2-ம் தேதி முதல் விரிவுபடுத்தப்பட உள்ளது. காந்தி ஜெயந்தி தினமான நாளை இந்தத் திட்டம் தொடங்கப்படுவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை குறிப்பிட்ட வகை அரசு பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயண வசதி இருந்து வந்த நிலையில், ‘வெற்றிப் பயணம்’ திட்டத்தின் மூலம் இந்தச் சலுகை மேலும் பல வகையான அரசு பேருந்துகளுக்கு விரிவுபடுத்தப்படுகிறது.
இதன்படி, எக்ஸ்பிரஸ், LSS (Limited Stop Service), டீலக்ஸ் மற்றும் புறநகர் சாதாரண பேருந்துகள் உள்ளிட்ட வகை அரசு பேருந்துகளில் பெண்கள் கட்டணமின்றி பயணம் செய்ய முடியும்.
மாநிலம் முழுவதும் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுவதால், மாணவிகள் தொலைதூரக் கல்லூரிகளுக்குச் செல்லவும், வேலைக்குச் செல்லும் பெண்கள் தங்கள் பணியிடங்களுக்குச் செல்லவும், மருத்துவம் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்காகவும் இலவசமாக பேருந்துகளில் பயணிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
மேலும், கிடைத்துள்ள தகவலின்படி பெண்கள் மற்றும் திருநங்கைகளுக்கும் இந்த விரிவாக்கப்பட்ட கட்டணமில்லா பயண வசதி வழங்கப்பட உள்ளது.
இதன் மூலம் ஏற்கனவே நடைமுறையில் உள்ள இலவச பேருந்து பயண வசதி, கூடுதல் பேருந்து வகைகள் மற்றும் வழித்தடங்களுக்கு விரிவடைகிறது. பயணிகள் தாங்கள் செல்லும் பேருந்து அரசு போக்குவரத்துக் கழக பேருந்தா என்பதை உறுதி செய்து கொண்டு பயணம் செய்வது முக்கியம்.
