செய்திகள்

கேரள அரசியலில் பரபரப்பு.. சதீசன் அரசுக்கு எதிராக கூட்டணிக்குள் குரல்கள்!

கேரள அரசியலில் பரபரப்பு.. சதீசன் அரசுக்கு எதிராக கூட்டணிக்குள் குரல்கள்!

கேரளாவில் முதல்வர் வி.டி. சதீசன் தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி அரசில், முக்கிய அரசு நியமனங்கள் தொடர்பாக உள்கட்சி மற்றும் கூட்டணி அதிருப்தி வெளிப்படையாகத் தொடங்கியுள்ளது.

யூ.டி.எஃப் ஒருங்கிணைப்பாளரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான அடூர் பிரகாஷ், முக்கிய முடிவுகள் குறித்து கூட்டணி தலைவர்களிடம் போதிய ஆலோசனை நடத்தப்படவில்லை என பகிரங்கமாக அதிருப்தி தெரிவித்துள்ளார். முக்கிய முடிவுகள் குறித்து ஊடகங்கள் மூலமாகவே தான் அறிந்து கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார்.

குறிப்பாக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மூத்த தலைவர் எம்.கே. முனீர் நிர்வாக சீர்திருத்த ஆணையத்தின் தலைவராகவும், ஃபார்வர்ட் பிளாக் பொதுச் செயலாளர் ஜி. தேவராஜன் கேரள அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாகவும் கேபினட் அந்தஸ்தில் நியமிக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த முடிவுகள் குறித்து தன்னிடம் ஆலோசனை நடத்தப்படவில்லை என அடூர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

மேலும், முந்தைய எல்.டி.எஃப் ஆட்சியில் வாரியங்கள் மற்றும் கழகங்களில் நியமிக்கப்பட்ட தலைவர்களை மாற்றி, யூ.டி.எஃப் சார்பில் புதிய நியமனங்களை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையும் கூட்டணிக்குள் எழுந்துள்ளது. இந்த விவகாரத்திலும் கட்சித் தொண்டர்களிடையே அதிருப்தி இருப்பதாக அடூர் பிரகாஷ் கூறியுள்ளார்.

இதற்கிடையே, சதீசனுக்கு நெருக்கமானவர்கள் இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளதாகவும், முதல்வரின் செயல்பாடுகளை விமர்சிப்பதற்கான முயற்சி என அவர்கள் கூறியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

முதல்வராக சதீசன் பொறுப்பேற்று சுமார் நான்கு மாதங்களிலேயே யூ.டி.எஃப் கூட்டணிக்குள் முக்கிய முடிவுகள் மற்றும் அதிகாரப் பகிர்வு தொடர்பான கருத்து வேறுபாடுகள் வெளிப்படுவது கேரள அரசியலில் கவனம் பெற்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *