17 வயதில் வரலாறு படைத்த கும்கும்.. வில்வித்தையில் இந்தியாவுக்கு தங்கம்!
2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவின் பதக்க வேட்டை தொடர்ந்து வருகிறது. வில்வித்தை பிரிவில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கப் பதக்கம் கிடைத்துள்ளது.
பெண்களுக்கான தனிநபர் ரிகர்வ் பிரிவின் இறுதிப்போட்டியில் இந்தியாவின் 17 வயது வீராங்கனை கும்கும் மொஹோட், தென் கொரியாவின் ஓ யேஜினை எதிர்கொண்டார். பரபரப்பாக நடைபெற்ற போட்டி 5-5 என சமநிலையில் முடிந்ததால், வெற்றியாளரை தீர்மானிக்க ஷூட்-ஆஃப் நடத்தப்பட்டது.
இதில் கும்கும் மொஹோட் துல்லியமாக 10 புள்ளிகளைப் பெற்று தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார். தென் கொரிய வீராங்கனை 8 புள்ளிகள் மட்டுமே எடுத்ததால், கும்கும் 6-5 என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.
இதன் மூலம் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பெண்களுக்கான தனிநபர் ரிகர்வ் பிரிவில் தங்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற வரலாற்றுச் சாதனையை கும்கும் படைத்துள்ளார்.
வில்வித்தையில் இந்தியாவுக்கு ஏற்கெனவே பல பதக்கங்கள் கிடைத்துள்ள நிலையில், கும்குமின் இந்த தங்கம் இந்தியாவின் பதக்கப் பட்டியலில் மேலும் ஒரு முக்கியமான வெற்றியாக அமைந்துள்ளது.
