செய்திகள்

இளையராஜா இசை ஆராய்ச்சி மையம்.. அக்.11-ல் திறந்து வைக்கும் பிரதமர் மோடி!

இளையராஜா இசை ஆராய்ச்சி மையம்.. அக்.11-ல் திறந்து வைக்கும் பிரதமர் மோடி!

சென்னை ஐஐடி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள இசைஞானி இளையராஜா இசை ஆராய்ச்சி மையத்தை பிரதமர் நரேந்திர மோடி வரும் அக்டோபர் 11-ம் தேதி திறந்து வைக்க உள்ளார். இதற்காக பிரதமர் மோடி அன்றைய தினம் சென்னை வருகிறார்.

பிரதமரின் சென்னை பயணத்தின்போது, பூந்தமல்லி – வடபழனி இடையிலான சென்னை மெட்ரோ ரயில் சேவையை தொடங்கி வைப்பதுடன், மெட்ரோ ரயிலில் போரூர் வரை பயணம் மேற்கொள்ள உள்ளார். அதன்பின்னர் சென்னை ஐஐடி வளாகத்துக்கு செல்லும் அவர், அங்கு நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.

இதன் ஒரு பகுதியாக, சென்னை ஐஐடி வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள இளையராஜா இசை ஆராய்ச்சி மையத்தை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். இந்த மையத்துக்கான அடிக்கல் கடந்த 2024-ம் ஆண்டு நாட்டப்பட்டது. இதற்காக இளையராஜாவின் இசை நிறுவனத்துடன் சென்னை ஐஐடி சார்பில் புரிந்துணர்வு ஒப்பந்தமும் மேற்கொள்ளப்பட்டது.

இசை தொடர்பான ஆராய்ச்சி மற்றும் கல்வி நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் இந்த மையம் உருவாக்கப்பட்டுள்ளது. இசைஞானி இளையராஜாவின் பெயரில் ஐஐடி மெட்ராஸ் வளாகத்தில் இந்த மையம் அமைந்திருப்பது இசை ஆர்வலர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது.

பிரதமர் மோடியின் சென்னை பயணத்தில் மெட்ரோ தொடக்கம் மற்றும் ஐஐடி நிகழ்ச்சிகளுடன், இளையராஜா இசை ஆராய்ச்சி மையத்தின் திறப்பு விழாவும் முக்கிய நிகழ்வாக இடம்பெறுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *