‘புஷ்பக விமானம்’ முதல் ‘ஆதித்யா 369’ வரை.. இந்திய சினிமாவை வியக்க வைத்த இயக்குநர் சிங்கீதம் மறைவு!
இந்திய சினிமாவின் முன்னோடி இயக்குநர்களில் ஒருவரான சிங்கீதம் சீனிவாச ராவ், தனது 94 வயதில் சென்னையில் காலமானார். வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அக்டோபர் 3ஆம் தேதி இரவு அவர் உயிரிழந்தார்.
ஆறு தசாப்தங்களுக்கும் மேலாக திரைத்துறையில் பயணித்த சிங்கீதம் சீனிவாச ராவ், இயக்குநர் மட்டுமின்றி திரைக்கதை ஆசிரியர், தயாரிப்பாளர், இசையமைப்பாளர் என பன்முக திறமையுடன் செயல்பட்டார். தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் சுமார் 60-க்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார்.
கமல்ஹாசன் நடித்த ‘புஷ்பக விமானம்’, ‘அபூர்வ சகோதரர்கள்’, ‘மைக்கேல் மதன காமராஜன்’ உள்ளிட்ட திரைப்படங்கள் அவரது படைப்பாற்றலுக்கு முக்கிய எடுத்துக்காட்டுகளாக அமைந்தன. குறிப்பாக வசனமே இல்லாமல் உருவான ‘புஷ்பக விமானம்’ திரைப்படம் இந்திய சினிமாவில் தனித்துவமான முயற்சியாக பார்க்கப்படுகிறது.
அதேபோல், காலப்பயணத்தை மையமாகக் கொண்ட ‘ஆதித்யா 369’ திரைப்படமும் அவரது புதுமையான சிந்தனைக்கு எடுத்துக்காட்டாக அமைந்தது. கற்பனை, அறிவியல், நகைச்சுவை என வெவ்வேறு வகைகளை இணைத்து திரைப்படங்களை உருவாக்கியவர் சிங்கீதம்.
94 வயதிலும் திரைப்படப் பணியை தொடர்ந்து வந்த அவர், தனது 61வது படமான ‘சிங் கீதம்’ மூலம் உலகின் மூத்த active filmmakers-ல் ஒருவராகவும் கவனம் பெற்றார். அவரது மறைவுக்கு கமல்ஹாசன், ஜூனியர் என்டிஆர் உள்ளிட்ட திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
