ஆசிய விளையாட்டு நிறைவு.. இந்தியா வென்ற தங்கம், வெள்ளி, வெண்கலம் எத்தனை?
ஜப்பானின் ஐச்சி-நகோயாவில் நடைபெற்ற 2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகள் கோலாகலமாக நிறைவடைந்துள்ளன. அக்டோபர் 4ஆம் தேதி நடைபெற்ற நிறைவு விழாவுடன் போட்டிகள் முடிவுக்கு வந்த நிலையில், இந்திய அணி மொத்தம் 85 பதக்கங்களை வென்று பதக்கப் பட்டியலில் 4-வது இடத்தைப் பிடித்துள்ளது.
இந்தியாவின் 85 பதக்கங்களில் 21 தங்கம், 27 வெள்ளி மற்றும் 37 வெண்கலப் பதக்கங்கள் அடங்கும். போட்டியின் இறுதிக்கட்டத்தில் இந்திய வீரர்கள் தொடர்ந்து பதக்கங்களை குவித்ததால், இந்தியாவின் பதக்க எண்ணிக்கை கணிசமாக உயர்ந்தது.
குறிப்பாக வில்வித்தையில் இந்தியா சிறப்பாக செயல்பட்டு 5 தங்கம், 2 வெள்ளி, 2 வெண்கலம் என 9 பதக்கங்களை கைப்பற்றியது. குத்துச்சண்டையில் 3 தங்கம் உட்பட 6 பதக்கங்களும், மல்யுத்தத்தில் 2 தங்கம், 2 வெள்ளி, 2 வெண்கலம் என 6 பதக்கங்களும் கிடைத்தன.
கிரிக்கெட், ஹாக்கி மற்றும் கபடி ஆகிய அணிகள் தங்கப் பதக்கங்களை வென்று இந்தியாவின் பதக்க எண்ணிக்கைக்கு முக்கிய பங்களிப்பை வழங்கின. குறிப்பாக ஆடவர் மற்றும் மகளிர் கிரிக்கெட், ஆடவர் மற்றும் மகளிர் ஹாக்கி, ஆடவர் மற்றும் மகளிர் கபடி ஆகியவற்றில் இந்தியா தங்கம் வென்றது.
முந்தைய ஹாங்சோ ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா 106 பதக்கங்களை வென்றிருந்தது. இந்த முறை 85 பதக்கங்களுடன் முடித்துள்ள இந்தியா, முந்தைய போட்டியை விட 21 பதக்கங்கள் குறைவாக பெற்றுள்ளது. இருப்பினும், பதக்கப் பட்டியலில் 4-வது இடத்தை தக்கவைத்துள்ளது.
2026 ஆசிய விளையாட்டுப் போட்டியில் சீனா 341 பதக்கங்களுடன் முதலிடத்திலும், போட்டியை நடத்திய ஜப்பான் 269 பதக்கங்களுடன் 2-வது இடத்திலும், தென் கொரியா 150 பதக்கங்களுடன் 3-வது இடத்திலும் உள்ளன.
இந்திய அணியின் சார்பில் துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனை நீரு தண்டா 2 தங்கம் மற்றும் ஒரு வெள்ளி என 3 பதக்கங்களை வென்று, நிறைவு விழாவில் இந்திய தேசியக் கொடியை ஏந்திச் சென்றார்.
