“எல்லாத்தையும் கொடுத்துட்டேன்!”.. கேப்டன் பதவிக்கு குட்பை சொன்ன ஹர்மன்பிரீத் கவுர்.. உணர்ச்சிகரமான பதிவு!
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டனாக நீண்ட காலம் செயல்பட்டு வந்த ஹர்மன்பிரீத் கவுர், அனைத்து வடிவிலான கிரிக்கெட்டிலும் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இன்று தனது சமூக வலைதளப் பதிவின் மூலம் இந்த முடிவை அவர் தெரிவித்துள்ளார்.

கேப்டன் பதவியில் இருந்து விலகுவது எளிதான முடிவு அல்ல என்றும், இந்தப் பயணத்தில் ஏராளமான நினைவுகள், உணர்வுகள் மற்றும் தியாகங்கள் இருப்பதாகவும் ஹர்மன்பிரீத் கவுர் தெரிவித்துள்ளார். அணிக்காக தனது முழு உழைப்பையும் அர்ப்பணித்ததாகக் கூறிய அவர், பல நேரங்களில் தனது தனிப்பட்ட ஆட்டம், வளர்ச்சி மற்றும் சொந்த விருப்பங்களைக் கூட ஒதுக்கி வைத்ததாக குறிப்பிட்டுள்ளார்.
கேப்டனாக இருந்த காலத்தில் பல கடினமான முடிவுகளை எடுக்க வேண்டியிருந்ததாகவும், அந்த முடிவுகள் அனைவராலும் புரிந்துகொள்ளப்படவில்லை என்றாலும், அணியை முன்னேற்ற வேண்டும் என்பதே தனது ஒரே நோக்கமாக இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். அதேபோல், புதிய வீராங்கனைகள் வளரவும், தங்கள் திறமையின் மீது நம்பிக்கை வைக்கவும் வாய்ப்பு வழங்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்தியதாகவும் கூறியுள்ளார்.
தனது கேப்டன்சி பயணத்தில் தோல்விகள், விமர்சனங்கள், ஏமாற்றங்கள் மட்டுமின்றி, வெற்றிகள் மற்றும் நாட்டுக்காக விளையாடிய பெருமைமிகு தருணங்களையும் அனுபவித்ததாக ஹர்மன்பிரீத் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக, 2025-ல் இந்திய மகளிர் அணி முதல்முறையாக ஒருநாள் உலகக் கோப்பையை வென்றது அவரது கேப்டன்சி காலத்தின் முக்கியமான சாதனையாக அமைந்தது. மேலும், 2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்திய அணியை தங்கப் பதக்கத்துக்கும் அவர் வழிநடத்தினார்.
கேப்டன் பதவியில் இருந்து விலகினாலும், கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறவில்லை என்பதை ஹர்மன்பிரீத் தெளிவுபடுத்தியுள்ளார். இனிமேல் அணிக்காக ஒரு வீராங்கனையாக தொடர்ந்து விளையாட இருப்பதாகவும், கிரிக்கெட் மீதான தனது அன்பு என்றும் மாறாது என்றும் தெரிவித்துள்ளார்.
“கேப்டன்சி முடிவுக்கு வருகிறது… ஆனால் பயணம் தொடர்கிறது” என்ற அவரது உணர்ச்சிபூர்வமான பதிவு தற்போது கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
