சென்னையில் NIA வழக்குகளுக்கு தனி நீதிமன்றம்.. பயங்கரவாதம் முதல் உளவு வழக்குகள் வரை விசாரணை!
இந்த சிறப்பு நீதிமன்றத்தில் தேசிய பாதுகாப்பு தொடர்பான பல்வேறு முக்கிய வழக்குகள் விசாரணைக்கு வர உள்ளன. குறிப்பாக பயங்கரவாதம் தொடர்பான வழக்குகள், உளவு நடவடிக்கைகள், விமானப் பாதுகாப்பு மற்றும் கடல் பாதுகாப்பு தொடர்பான வழக்குகள் ஆகியவை இதில் அடங்கும்.
மேலும், மிகப்பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய ஆயுதங்களை வைத்திருப்பது உள்ளிட்ட வழக்குகளும் இந்த நீதிமன்றத்தின் விசாரணை வரம்புக்குள் வர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏன் தனி நீதிமன்றம்?
NIA விசாரிக்கும் வழக்குகள் பெரும்பாலும் தேசிய பாதுகாப்பு மற்றும் தீவிர குற்றச்சாட்டுகள் தொடர்புடையவை. இதுபோன்ற வழக்குகள் ஏற்கனவே பல்வேறு குற்றவியல் வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றங்களிலேயே நடைபெறுவதால், விசாரணை நீண்ட காலம் செல்லும் வாய்ப்பு உள்ளது.
இந்த நிலையில், NIA வழக்குகளுக்காக பிரத்யேக நீதிமன்றங்களை அமைத்து விசாரணையை விரைவுபடுத்த வேண்டும் என உச்சநீதிமன்றமும் வலியுறுத்தி வந்தது. தமிழகத்தில் இதற்கான நடவடிக்கை தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் NIA தொடர்பான வழக்குகளின் விசாரணைக்கு தனி நீதிமன்றம் அமைக்கப்பட்டுள்ளதால், முக்கிய வழக்குகளின் விசாரணை காலதாமதமின்றி நடைபெறுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
