செய்திகள்

வயலில் உழைக்கும் கைகள்.. கேமரா முன் மாடல் லுக்! அசத்தும் விவசாயி!

வயலில் உழைக்கும் கைகள்.. கேமரா முன் மாடல் லுக்! அசத்தும் விவசாயி!

விவசாயப் பணிகளில் ஈடுபட்டுக்கொண்டே தனது தனித்துவமான ஃபேஷன் ஸ்டைலால் இணையத்தில் கவனம் ஈர்த்து வருகிறார் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 24 வயது இளைஞர் நிஷாந்த் கெர்கெட்டா (Nishant Kerketta). இவரது ஃபேஷன் ரீல்ஸ் சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதுடன், பாலிவுட் பிரபலங்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

நிஷாந்தின் வீடியோக்களில் இருக்கும் சிறப்பே, கிராமப்புற வாழ்க்கையையும் நவீன ஃபேஷனையும் ஒன்றாகக் கலந்து காட்டுவதுதான். வயலில் விவசாயப் பணிகளைச் செய்யும் தோற்றத்தில் வீடியோ தொடங்குகிறது. அடுத்த காட்சியிலேயே ஸ்டைலான சட்டைகள், பேன்ட்கள், நீளமான கோட்டுகள், பூட்ஸ், சன்கிளாஸ் உள்ளிட்டவற்றுடன் மாடல் போல தோன்றுகிறார். இதற்காகப் பெரிய ஸ்டுடியோக்களையோ ஆடம்பரமான இடங்களையோ அவர் பயன்படுத்துவதில்லை. தனது கிராமம், வயல்வெளி, வீட்டின் சுற்றுப்புறம் போன்ற இடங்களையே ஃபேஷன் வீடியோக்களுக்கான பின்னணியாக மாற்றியுள்ளார்.

விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த நிஷாந்த், பட்டப்படிப்பை முடித்த பிறகு குடும்ப விவசாயப் பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார். அதேசமயம், மாடலிங் மற்றும் ஃபேஷன் மீதான ஆர்வத்தையும் கைவிடாமல் தொடர்ந்து வீடியோக்களை உருவாக்கி வருகிறார். ஆரம்பத்தில் தனக்குப் பிடித்த உடைகளை அணிந்து வீடியோக்களைப் பகிர்ந்த அவர், தற்போது தனது தனித்துவமான தோற்றத்தால் பலரது கவனத்தையும் பெற்றுள்ளார்.

https://www.instagram.com/reel/DeDhRuZgEzb/?utm_source=ig_web_button_share_sheet

இவரது வீடியோக்களில் ஒன்று 1.14 கோடிக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன. இதனால் சமூக வலைதளப் பயனர்கள் பலரும் இவரது ஸ்டைலைப் பாராட்டி வருகின்றனர். சிலர் இவரை ‘Aura Farmer’ என்றும் அழைக்கத் தொடங்கியுள்ளனர்.

மேலும், நடிகை பூமி பெட்னேகர், ஷிபானி தண்டேகர் உள்ளிட்ட பிரபலங்களும் நிஷாந்தின் ஃபேஷன் வீடியோக்களுக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர். கிராமப்புறச் சூழலிலிருந்தும் தனித்துவமான ஃபேஷன் உணர்வை வெளிப்படுத்த முடியும் என்பதை நிஷாந்தின் முயற்சி எடுத்துக்காட்டுகிறது.

விவசாயத்தையும் தனது தனிப்பட்ட ஆர்வத்தையும் இணைத்துப் பயணிக்கும் நிஷாந்தின் இந்த முயற்சி, இணையத்தில் பலரையும் கவர்ந்து வருகிறது. திறமைக்கும் படைப்பாற்றலுக்கும் இடம் கிடைத்தால், எந்தச் சூழலிலிருந்தும் தனக்கான அடையாளத்தை உருவாக்க முடியும் என்பதற்கு இவரது பயணம் ஓர் உதாரணமாக அமைந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *