ராணுவ உபகரணங்கள் ஏற்றுமதியில் இந்தியா அதிரடி வளர்ச்சி.. ₹38,424 கோடி வருவாய்!
இந்தியாவின் பாதுகாப்புத் துறை ஏற்றுமதி வரலாறு காணாத அளவை எட்டியுள்ளது. 2025–26 நிதியாண்டில் இந்தியாவின் பாதுகாப்பு உபகரணங்கள் ஏற்றுமதி ₹38,424 கோடியாக உயர்ந்துள்ளது. இது முந்தைய நிதியாண்டின் ₹23,622 கோடியுடன் ஒப்பிடும்போது 62.66% அதிகரிப்பு ஆகும்.
பாதுகாப்புத் துறையில் இந்தியா தன்னிறைவு அடைவதுடன், உலக நாடுகளுக்கு ராணுவ உபகரணங்களை வழங்கும் முக்கிய நாடாகவும் உருவெடுத்து வருகிறது. ஏவுகணைகள், பாதுகாப்பு உபகரணங்கள், ராணுவத் தொழில்நுட்பங்கள் உள்ளிட்ட இந்தியாவில் தயாரிக்கப்படும் பொருட்களுக்கு சர்வதேச அளவில் வரவேற்பு அதிகரித்து வருவதாக மத்திய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பொதுத்துறை நிறுவனங்கள், தனியார் நிறுவனங்களின் பங்களிப்பு!
இந்த ஏற்றுமதியில் பாதுகாப்புத் துறை பொதுத்துறை நிறுவனங்கள் (DPSUs) 54.84% பங்களிப்பை வழங்கியுள்ளன. தனியார் நிறுவனங்களின் பங்களிப்பு 45.16% ஆக உள்ளது. மதிப்பின் அடிப்படையில், பொதுத்துறை நிறுவனங்கள் ₹21,071 கோடி மதிப்பிலான பாதுகாப்புப் பொருட்களையும், தனியார் நிறுவனங்கள் ₹17,353 கோடி மதிப்பிலான பொருட்களையும் ஏற்றுமதி செய்துள்ளன.
குறிப்பாக, முந்தைய நிதியாண்டுடன் ஒப்பிடும்போது பொதுத்துறை நிறுவனங்களின் ஏற்றுமதி 151% அதிகரித்துள்ளது. தனியார் நிறுவனங்களின் ஏற்றுமதியும் 14% வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
80-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி!
2025–26 நிதியாண்டில் இந்தியா 80-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பாதுகாப்பு உபகரணங்களை ஏற்றுமதி செய்துள்ளது. பாதுகாப்புப் பொருட்களை ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களின் எண்ணிக்கையும் 128-ல் இருந்து 145 ஆக உயர்ந்துள்ளது.
இந்த வளர்ச்சி, இந்தியாவின் உள்நாட்டு பாதுகாப்பு உற்பத்தித் திறன் மற்றும் உலகச் சந்தையில் இந்தியப் பொருட்களுக்கான வரவேற்பு அதிகரித்து வருவதைக் காட்டுகிறது. பாதுகாப்பு உற்பத்தியில் தன்னிறைவு பெறுவதுடன், உலகளாவிய பாதுகாப்பு உபகரணச் சந்தையில் இந்தியாவின் பங்களிப்பை அதிகரிப்பதற்கான முயற்சிகளும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
