செய்திகள்

ஆயுத பூஜை நெருங்கும் நேரத்தில் பொரி விலை கிடுகிடு உயர்வு! ஒரு மூட்டைக்கு ரூ.90 அதிகரிப்பு!

ஆயுத பூஜை நெருங்கும் நேரத்தில் பொரி விலை கிடுகிடு உயர்வு! ஒரு மூட்டைக்கு ரூ.90 அதிகரிப்பு!

தமிழகத்தில் ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை பண்டிகைகள் நெருங்கி வரும் நிலையில், பொரியின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. பூஜைக்காகப் பொரி வாங்கத் தயாராகும் பொதுமக்களுக்கும், விற்பனையில் ஈடுபடும் சிறு வியாபாரிகளுக்கும் இந்த விலை உயர்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அரிசி விலை உயர்வே முக்கியக் காரணம்!

பொரி தயாரிப்பதற்குத் தேவையான அரிசியின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதே இந்த விலை உயர்வுக்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது. கடந்த சில வாரங்களாக அரிசி மூட்டையின் விலை ரூ.300 முதல் ரூ.600 வரை உயர்ந்துள்ளதாக உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் பொரி தயாரிப்புக்கான செலவும் அதிகரித்துள்ளது.

100 லிட்டர் பொரி மூட்டை ரூ.470!

திண்டுக்கல் பகுதியில் ஆயுத பூஜையை முன்னிட்டு பொரி தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், அரிசி தட்டுப்பாடு காரணமாகப் பொரியின் விலையும் உயர்ந்துள்ளது.

கடந்த ஆண்டு 100 லிட்டர் பொரி மூட்டை ரூ.380-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்போது ரூ.90 அதிகரித்து ரூ.470-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், பண்டிகை நெருங்கும் நேரத்தில் தேவை அதிகரிப்பதால் விலை மேலும் உயர வாய்ப்புள்ளதாக உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சிறு வியாபாரிகள் கவலை!

மூலப்பொருட்களின் விலை உயர்வுடன், தொழிலாளர்களின் கூலி மற்றும் எரிபொருள் செலவுகளும் அதிகரித்துள்ளன. இதனால் உற்பத்தியாளர்கள் பொரியின் விலையை உயர்த்த வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

அதே நேரத்தில், பண்டிகைக் காலத்தில் விலை உயர்வு காரணமாக விற்பனை பாதிக்கப்படுமோ என்ற கவலையில் சிறு வியாபாரிகள் உள்ளனர். ஆயுத பூஜை நெருங்கும் நிலையில், பொரியின் விலை உயர்வு பொதுமக்களின் பண்டிகைச் செலவுகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *