தமிழகத்தில் 19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! சென்னையிலும் மழை வெளுக்கும்!
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், இன்று (அக்டோபர் 16) 19 மாவட்டங்களில் மாலை 4 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
எந்தெந்த மாவட்டங்களில் மழை பெய்யும்?
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், தர்மபுரி, சேலம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, கடலூர், நீலகிரி, கரூர், ராமநாதபுரம், கோயம்புத்தூர், தேனி, தென்காசி, கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி ஆகிய 19 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
வடகிழக்குப் பருவமழை தீவிரமடைகிறதா?
தென்னிந்தியப் பகுதிகளில் வடகிழக்குத் திசைக் காற்று வீசத் தொடங்கியுள்ளதால், தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், தெற்கு கடலோரத் தமிழகப் பகுதிகளில் நிலவும் வளிமண்டலச் சுழற்சி மற்றும் வங்கக்கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்தத் தாழ்வுப் பாதை காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
எனவே, மழை பெய்யக்கூடிய மாவட்டங்களில் வசிக்கும் பொதுமக்கள் வெளியில் செல்லும்போது முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
