“30 வருஷமா ரசிகர்… இன்னும் மறக்கல!” – கூட்டத்தில் ரசிகரை அடையாளம் கண்ட முதல்வர் விஜய்!
கோவையில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டிருந்த நிலையில், 30 ஆண்டுகளாகத் தனது ரசிகராக இருக்கும் ரங்கராஜை அடையாளம் கண்டு, தோளில் கைபோட்டு நலம் விசாரித்த முதலமைச்சர் விஜய்யின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவையில் விஜய்க்கு உற்சாக வரவேற்பு!
கோவையில் ரூ.300 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள பெரியார் அறிவுலகத்தைத் திறந்து வைப்பதற்காக முதலமைச்சர் விஜய் வருகை தந்தார். கோவை விமான நிலையத்தில் அவருக்கு தமிழக வெற்றிக் கழகத் தொண்டர்களும் பொதுமக்களும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதனைத் தொடர்ந்து, விமான நிலையத்திலிருந்து காரில் சென்றபடி சாலையோரம் திரண்டிருந்த மக்களைச் சந்தித்தார். அப்போது கூட்டத்தில் இருந்த ஒரு ரசிகரைப் பார்த்ததும் விஜய் தனது காரை நிறுத்தச் சொன்னார்.
30 ஆண்டுகால ரசிகரை மறக்காத விஜய்!
மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த மூத்த ரசிகர் மன்ற நிர்வாகியான ரங்கராஜை விஜய் அடையாளம் கண்டுகொண்டார். அவரை அருகில் அழைத்து, தோளில் பாசத்துடன் கைபோட்டு, “எப்படி இருக்கீங்க? குடும்பத்தினர் அனைவரும் நலம்தானா?” என்று நலம் விசாரித்தார்.
முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகும், பல ஆண்டுகளாகத் தன்னுடன் பயணிக்கும் ரசிகரை அடையாளம் கண்டு அன்புடன் பேசியது அங்கிருந்த தொண்டர்களை நெகிழ்ச்சியடையச் செய்தது.
“ஒன்ஸ் மோர் படத்திலிருந்து ரசிகராக இருக்கிறேன்!”
இந்தச் சந்திப்பு குறித்து ரங்கராஜ் பேசுகையில், “30 வருஷமா நான் விஜய் ரசிகனா இருக்கேன். ‘ஒன்ஸ் மோர்’ படக் காலத்துல இருந்து அவருடன் பயணிக்கிறேன். தமிழ்நாட்டோட முதலமைச்சராகப் பெரிய இடத்துக்குப் போன பிறகும், இவ்வளவு பெரிய கூட்டத்தில் என்னை மறக்காமல் அடையாளம் கண்டுகொண்டது மகிழ்ச்சியாக இருக்கிறது” என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ!
திரையுலகிலிருந்து அரசியலுக்கு வந்து முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகும், தன்னுடைய பழைய ரசிகர்களை விஜய் நினைவில் வைத்திருப்பதாகக் கூறி, இந்தச் சம்பவத்தைத் தவெக தொண்டர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
பல ஆண்டுகளாகத் தொடரும் ரசிகர்–நடிகர் உறவு, அரசியல் பயணத்திலும் நீடிப்பதை வெளிப்படுத்தும் இந்தச் சந்திப்பு தற்போது கவனம் ஈர்த்துள்ளது.
