சரக்கு வாகனங்களுக்கு இனி அடிக்கடி சோதனை இல்லை! தமிழக அரசின் புதிய நடைமுறை
தமிழகத்தில் சரக்குகளை ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கான ஜிஎஸ்டி சோதனை நடைமுறையில் முக்கிய மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. வணிகர்கள் மற்றும் தொழில் நிறுவனங்கள் எதிர்கொள்ளும் தேவையற்ற தாமதங்களைக் குறைக்கும் நோக்கில், வழக்கமான ரோவிங் குழுக்களின் சோதனை முறைக்குப் பதிலாக, குறிப்பிட்ட தகவல்களின் அடிப்படையில் வாகனங்களைச் சோதனையிடும் புதிய நடைமுறையைத் தமிழக வணிக வரித்துறை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன்படி, சரக்குகளை ஏற்றிச் செல்லும் வாகனங்களை அதிகாரிகள் தன்னிச்சையாக நிறுத்திச் சோதனையிட முடியாது. குறிப்பிட்ட முறைகேடு தொடர்பான தகவல்கள் கிடைத்தால் மட்டுமே, உரிய அதிகாரியின் முன் அனுமதியுடன் வாகனங்களை நிறுத்திச் சோதனையிட முடியும். சோதனைக்கான காரணங்கள் மின்னணு முறையில் எழுத்துப்பூர்வமாகப் பதிவு செய்யப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த மாற்றம், கடந்த அக்டோபர் 8ஆம் தேதி நடைபெற்ற 57ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளைத் தொடர்ந்து கொண்டுவரப்பட்டுள்ளது. சரக்குப் போக்குவரத்தின்போது நடைபெறும் தேவையற்ற சோதனைகளைக் குறைத்து, வணிக நடவடிக்கைகளை எளிதாக்குவதே இதன் முக்கிய நோக்கமாகும்.
குறிப்பாக, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் மூலப்பொருட்களையும் தயாரிப்புகளையும் பல்வேறு இடங்களுக்கு அனுப்பும்போது ஏற்படும் தாமதங்கள் குறைய வாய்ப்புள்ளது. அடிக்கடி வாகனங்கள் நிறுத்தப்படுவதால் உற்பத்தி அட்டவணை மற்றும் சரக்குகள் விநியோகம் பாதிக்கப்படுவதாகத் தொழில் நிறுவனங்கள் ஏற்கெனவே கவலை தெரிவித்திருந்தன.
இந்த புதிய நடைமுறைக்கு கோவையைச் சேர்ந்த தொழில் அமைப்புகளும் வரவேற்பு தெரிவித்துள்ளன. இதனால் சரக்குப் போக்குவரத்து சீராக நடைபெறுவதுடன், வணிகச் செலவுகளையும் தாமதங்களையும் குறைக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனினும், ஜிஎஸ்டி விதிமீறல் குறித்த நம்பகமான தகவல்கள் கிடைக்கும் பட்சத்தில், உரிய அனுமதியுடன் வாகனங்களை நிறுத்திச் சோதனையிடும் அதிகாரம் தொடர்கிறது. எனவே, இந்த மாற்றம் சோதனைகளை முழுமையாக ரத்து செய்வதல்ல; அவற்றைத் தகவல் அடிப்படையிலும் பொறுப்புணர்வுடனும் மேற்கொள்வதற்கான நடவடிக்கையாகும்.
