தமிழகத்தில் கனமழை… ஆடுகளை மீட்கச் சென்ற இளைஞர் இடி, மின்னல் தாக்கி உ*ரிழப்பு!
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த கனமழையின்போது இளைஞர் ஒருவர் இடி, மின்னல் தாக்கி உ*ரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகப் பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக, நேற்று மதியம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
இந்நிலையில், தூத்துக்குடி அருகே உள்ள கோரம்பள்ளம், பெரியநாயகிபுரம் நடுத்தெருவைச் சேர்ந்த மதன்குமார் (24), தனது வீட்டில் ஆடுகளை வளர்த்து வந்துள்ளார். சம்பவத்தன்று மழை பெய்துகொண்டிருந்தபோது, அவரது ஆடுகள் வீட்டின் அருகே உள்ள சாலையில் மேய்ந்துகொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
மழையில் நனைந்துகொண்டிருந்த ஆடுகளைப் பாதுகாப்பாக வீட்டிற்கு அழைத்து வருவதற்காக மதன்குமார் வெளியே சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக இடி, மின்னல் தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து தகவலறிந்த போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வரும் நிலையில், இடி, மின்னல் ஏற்படும்போது பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்குவது அவசியமாகும். குறிப்பாக, திறந்தவெளிகள், மரங்களுக்கு அடியில் மற்றும் மின்கம்பங்களுக்கு அருகில் நிற்பதைத் தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.
