சென்னையில் மழையைச் சமாளிக்க 215 நிவாரண முகாம்கள் தயார்! மேயர் பிரியா முக்கிய உத்தரவு!
வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு, சென்னையில் வெள்ளப் பாதிப்புகளைத் தடுக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மேயர் பிரியா தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டடத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், துணை மேயர் மகேஷ்குமார், மாநகராட்சி ஆணையர் ஜி.எஸ்.சமீரன் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்றனர். கூட்டத்தில், பருவமழைக்கு முன்பாக முடிக்க வேண்டிய பணிகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
மழைநீர் வடிகால்களைத் தூர்வார உத்தரவு!
சென்னையில் உள்ள ஆறுகள், கால்வாய்கள், ரயில்வே குறுக்குக் கால்வாய்கள் மற்றும் மழைநீர் வடிகால்களில் தூர்வாரும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என மேயர் அறிவுறுத்தினார். மேலும், புதிதாக அமைக்கப்படும் மழைநீர் வடிகால்களின் கட்டுமானம் மற்றும் இணைப்புப் பணிகளையும் விரைவுபடுத்த உத்தரவிட்டார். தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்குவதைத் தடுக்க மோட்டார் பம்புகளைத் தயார் நிலையில் வைத்திருக்கவும் அறிவுறுத்தப்பட்டது.
215 நிவாரண முகாம்கள் தயார்!
மழையால் பாதிக்கப்படும் மக்களைத் தங்க வைப்பதற்காக அடையாளம் காணப்பட்டுள்ள 215 நிவாரண முகாம்களிலும் அடிப்படை வசதிகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது. மேலும், 116 சமையல் மையங்களில் போதுமான உணவுப் பொருட்கள் இருப்பில் உள்ளனவா என்பதையும் அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
பேருந்துச் சாலைகள் மற்றும் உட்புறச் சாலைகளில் உள்ள பள்ளங்களை மழைக்கு முன்பாகச் சீரமைக்கவும், அதிகளவில் மருத்துவ முகாம்களை நடத்தவும் உத்தரவிடப்பட்டது.
புகார் தெரிவிக்க 1913!
மழைக்காலத்தில் பொதுமக்களிடமிருந்து வரும் புகார்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கும் வகையில், மாநகராட்சியின் 1913 உதவி எண்ணில் பணியாளர்களைச் சுழற்சி முறையில் நியமிக்க வேண்டும் என்றும் மேயர் பிரியா வலியுறுத்தினார்.
