தமிழகத்தில் தொடரும் கனமழை எச்சரிக்கை! 17 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்; 9 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்!
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், மொத்தம் 26 மாவட்டங்களுக்கு வானிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு வங்கக்கடலில் இலங்கையை ஒட்டிய பகுதியில் நிலவிய வளிமண்டலச் சுழற்சி, தற்போது காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக மாறியுள்ளது. இதன் காரணமாக அக்டோபர் 23ஆம் தேதி வரை தமிழகத்தில் மழை தீவிரமடைய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், அக்டோபர் 23ஆம் தேதி வங்கக்கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாகவும் கணிக்கப்பட்டுள்ளது.
17 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!
மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், ராமநாதபுரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, நீலகிரி, கோயம்புத்தூர், சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை ஆகிய 17 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
9 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்!
ஈரோடு, திருப்பூர், கரூர், நாமக்கல், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கடலூர் மற்றும் விழுப்புரம் ஆகிய 9 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது.
3 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை!
தொடர் கனமழை காரணமாக திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து மழை பெய்ய வாய்ப்புள்ளதால், பொதுமக்கள் வானிலை அறிவிப்புகளைக் கவனித்து, தாழ்வான பகுதிகளில் நீர் தேங்குவது மற்றும் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுவது போன்ற சூழல்களில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். மாவட்ட நிர்வாகம் வெளியிடும் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுவது அவசியம்.
