விஜய்க்கு தனுஷ் போட்டியாக இருக்க முடியாது! அமைச்சர் மரிய வில்சன் கருத்து
நடிகர் தனுஷ் அரசியலுக்கு வருவது தொடர்பான பேச்சுகள் தற்போது அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளன. இந்நிலையில், நடிகர் விஜய்க்கு தனுஷ் போட்டியாக இருக்க முடியாது என்று அமைச்சர் மரிய வில்சன் கருத்து தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மரிய வில்சனிடம், நடிகர் தனுஷ் அரசியலுக்கு வருவது குறித்துக் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், தனுஷ் தனக்கு நீண்ட காலமாகத் தெரிந்த நண்பர் என்றும், அவர் அரசியலுக்கு வரப்போவதாக வெளியாகும் தகவல்களைச் சமூக வலைதளங்கள் மூலமாகவே அறிந்து வருவதாகவும் தெரிவித்தார்.
மேலும், தனுஷ் அரசியலுக்கு வருவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவாக இருப்பதாகத் தான் கருதுவதாகக் கூறினார். அதேசமயம், இந்தியா ஒரு ஜனநாயக நாடு என்பதால் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் என்றும், அவ்வாறு வருபவர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
தொடர்ந்து நடிகர் விஜய்யின் அரசியல் வரவேற்பு குறித்துப் பேசிய அவர், விஜய்க்கு மக்களிடம் கிடைத்துள்ள வரவேற்பு அனைவருக்கும் தெரியும் என்றும், ஊழலற்ற ஆட்சி என்ற அவரது நிலைப்பாடே முக்கியமானது என்றும் தெரிவித்தார்.
தனுஷின் அரசியல் வருகை குறித்த உறுதியான அறிவிப்பு இதுவரை வெளியாகாத நிலையில், அமைச்சர் மரிய வில்சனின் இந்தக் கருத்து அரசியல் வட்டாரத்தில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
