சுபாஷ் சந்திர கபூரை ஜெர்மனிக்கு அனுப்பும் உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தடை!
தமிழகக் கோயில்களில் பழமையான சிலைகள் திருடப்பட்டு வெளிநாடுகளுக்குக் கடத்தப்பட்ட வழக்குகளில் தண்டனை பெற்ற பழங்காலப் பொருட்கள் விற்பனையாளரான சுபாஷ் சந்திர கபூரை ஜெர்மனிக்கு அனுப்பும் சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
அமெரிக்கக் குடியுரிமை கொண்ட சுபாஷ் சந்திர கபூர், கடந்த 2012ஆம் ஆண்டு ஜெர்மனியிலிருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டார். அரியலூர் மாவட்டம் சுத்தமல்லி பகுதியில் உள்ள கோயிலில் இருந்து 19 பழமையான சிலைகள் திருடப்பட்ட வழக்கில், 2022ஆம் ஆண்டு அவருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அந்த வழக்கில் விதிக்கப்பட்ட தண்டனைக் காலத்தை அவர் ஏற்கெனவே நிறைவு செய்ததாகக் கூறப்படுகிறது. இருப்பினும், தமிழகத்தில் அவர் மீது மேலும் சில சிலைக் கடத்தல் வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டபோது விதிக்கப்பட்ட நிபந்தனைகளின்படி, ஜெர்மனியின் ஒப்புதல் இல்லாமல் பிற வழக்குகளில் அவரைத் தொடர்ந்து காவலில் வைக்க முடியாது எனக் கூறி, சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை அவரை ஜெர்மனிக்குத் திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டிருந்தது.
இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இதனை விசாரித்த உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து, சுபாஷ் சந்திர கபூர் தொடர்ந்து சிறைக் காவலில் இருக்க உத்தரவிட்டுள்ளது. மேலும், வழக்கின் அடுத்தகட்ட விசாரணை நான்கு வாரங்களுக்குப் பின்னர் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
