தீவிர புயலாக வலுப்பெற்ற முரசு – ஒடிசாவில் மக்களை வெளியேற்றும் பணி தீவிரம்!
வங்கக்கடலில் உருவான ‘முரசு’ புயல் தீவிர புயலாக வலுப்பெற்றுள்ளதைத் தொடர்ந்து, ஒடிசா மாநிலத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக, பாதிப்புக்கு உள்ளாகக்கூடிய தாழ்வான பகுதிகள் மற்றும் நிலச்சரிவு அபாயம் உள்ள இடங்களில் வசிக்கும் மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றும் பணியில் மாநில அரசு ஈடுபட்டுள்ளது.
இந்தப் புயல் ஆந்திரப் பிரதேசத்தின் தெற்கு கடற்கரைப் பகுதியை ஒட்டியே கரையைக் கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் தாக்கத்தால் ஒடிசாவின் தெற்குப் பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கஞ்சம், கஜபதி, ராயகடா, கோராபுட் மற்றும் மல்கங்கிரி உள்ளிட்ட மாவட்டங்கள் அதிக பாதிப்பைச் சந்திக்கக்கூடும் என்பதால் அப்பகுதி மாவட்ட ஆட்சியர்கள் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF), ஒடிசா பேரிடர் விரைவு நடவடிக்கைப் படை (ODRAF) மற்றும் தீயணைப்புத் துறையைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட மீட்புக் குழுக்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன.
மேலும், கனமழை, பலத்த காற்று மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கவும், மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
