செய்திகள்

சொத்துக் குவிப்பு வழக்கில் விஜயபாஸ்கர், மனைவிக்கு மீண்டும் அமலாக்கத்துறை சம்மன்!

சொத்துக் குவிப்பு வழக்கில் விஜயபாஸ்கர், மனைவிக்கு மீண்டும் அமலாக்கத்துறை சம்மன்!

வருமானத்திற்கு அதிகமாக ரூ.35.79 கோடி மதிப்பிலான சொத்துகளைக் குவித்ததாகக் கூறப்படும் வழக்கில், முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி ரம்யா ஆகியோருக்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது.

2016 முதல் 2021ஆம் ஆண்டு வரை அதிமுக ஆட்சியில் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சராக விஜயபாஸ்கர் பதவி வகித்தார். அந்தக் காலகட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாகச் சொத்துகள் சேர்த்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில், 2021ஆம் ஆண்டு தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு செய்தது.

இந்த வழக்கின் அடிப்படையில் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையும் விசாரணையைத் தொடங்கியது. இதன் ஒரு பகுதியாக, 2024ஆம் ஆண்டு மார்ச் மாதம் புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் உள்ள விஜயபாஸ்கரின் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

ஏற்கெனவே விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவியிடம் விசாரணை நடத்தப்பட்டு வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், தற்போது இரண்டாவது சுற்று விசாரணைக்காக மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

இதன்படி, இருவரில் ஒருவர் வரும் வெள்ளிக்கிழமை சென்னை மண்டல அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என்றும், மற்றொருவர் அடுத்த வாரம் விசாரணைக்கு வர வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. சொத்துகள் மற்றும் நிதிப் பரிவர்த்தனைகள் தொடர்பாக கூடுதல் விளக்கங்களைப் பெற இந்த விசாரணை நடைபெறுகிறது.