கே.என். நேருவின் மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்!
தமிழக முன்னாள் அமைச்சர் கே.என். நேரு மீதான வேலைக்கு லஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் வழக்கில், அவர் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் 2,538 பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பில் முறைகேடு நடந்ததாகவும், இதற்காக சுமார் ரூ.634 கோடி லஞ்சம் பெறப்பட்டதாகவும் அமலாக்கத்துறை குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தது. இந்த விவகாரம் தொடர்பான ஆவணங்களை அமலாக்கத்துறை தமிழக காவல்துறைக்கு அனுப்பியது.
இதன் அடிப்படையில், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை (DVAC) வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என்று கடந்த பிப்ரவரி 20ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை மறுஆய்வு செய்யக் கோரி கே.என். நேரு தாக்கல் செய்த மனுவையும் அக்டோபர் 26ஆம் தேதி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதனை எதிர்த்து அவர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மனுவை நீதிபதிகள் தீபங்கர் தத்தா மற்றும் ஷீல் நாகு அடங்கிய அமர்வு விசாரித்தது. உயர்நீதிமன்ற உத்தரவில் தலையிடுவதற்கு எந்தக் காரணமும் இல்லை எனக் கூறி மனுவைத் தள்ளுபடி செய்தது.
இருப்பினும், இந்த வழக்கில் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதாக இதற்கு அர்த்தமில்லை. விசாரணை சட்டப்படி தொடரும்.
