செய்திகள்

மெஸ்ஸியின் அபார ஆட்டம் – வெற்றியுடன் 2-வது இடத்திற்கு முன்னேறிய இன்டர் மியாமி!

மெஸ்ஸியின் அபார ஆட்டம் – வெற்றியுடன் 2-வது இடத்திற்கு முன்னேறிய இன்டர் மியாமி!

மேஜர் லீக் சாக்கர் (MLS) கால்பந்து தொடரில் நியூ இங்கிலாந்து ரெவல்யூஷன் அணிக்கு எதிரான ஆட்டத்தில், லயோனல் மெஸ்ஸியின் சிறப்பான ஆட்டத்தால் இன்டர் மியாமி அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

அமெரிக்காவின் ஃபாக்ஸ்பரோவில் நடைபெற்ற இந்தப் போட்டியின் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இரண்டாவது பாதியில் 53-வது நிமிடத்தில் நியூ இங்கிலாந்து அணியின் டேனியல் காஸ்டாக் கோல் அடித்து தனது அணிக்கு முன்னிலை பெற்றுத் தந்தார்.

இதற்குப் பதிலடி கொடுத்த இன்டர் மியாமி அணி 69-வது நிமிடத்தில் கோல் அடித்து ஆட்டத்தைச் சமன் செய்தது. மெஸ்ஸி தனது தலையால் பந்தை சக வீரர் ஜெர்மன் பெர்டராமேவுக்கு வழங்க, அவர் அதை கோலாக மாற்றினார்.

தொடர்ந்து 83-வது நிமிடத்தில் மெஸ்ஸி தனித்திறமையை வெளிப்படுத்தி, எதிரணி வீரர்களைக் கடந்து இடது காலால் கோல் அடித்தார். இதன் மூலம் இன்டர் மியாமி 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. இந்தப் போட்டியில் மெஸ்ஸி ஒரு கோல் அடித்ததுடன், மற்றொரு கோலுக்கும் உதவினார். நடப்பு MLS தொடரில் அவரது கோல் எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ளது.

இந்த வெற்றியின் மூலம் இன்டர் மியாமி 59 புள்ளிகளுடன் கிழக்கு மண்டலப் புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. 58 புள்ளிகளுடன் நியூ இங்கிலாந்து அணி மூன்றாவது இடத்தில் உள்ளது. மேலும், இந்த வெற்றியால் 2027-ஆம் ஆண்டுக்கான CONCACAF சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் பங்கேற்கும் வாய்ப்பையும் இன்டர் மியாமி உறுதி செய்துள்ளது.