மக்கள் தொகை கட்டுப்பாட்டு சட்டங்களை மறுபரிசீலனை செய்ய வேண்டும் – உச்சநீதிமன்றம்!
இந்தியாவில் மக்கள் தொகை வளர்ச்சியைக் கட்டுப்படுத்தும் நோக்கில் கொண்டுவரப்பட்ட இரண்டு குழந்தைகள் விதி தொடர்பான சட்டங்களை மறுபரிசீலனை செய்ய வேண்டிய நேரம் வந்துள்ளதாக உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. கடந்த 2003-ம் ஆண்டு இந்தியாவின் மொத்த கருவுறுதல் விகிதம் (TFR) 3.02 ஆக இருந்த நிலையில், தற்போது 1.9 ஆகக் குறைந்துள்ளது. ஒரு தலைமுறையின் மக்கள் தொகையை அடுத்த தலைமுறை சமநிலையில் மாற்றுவதற்குத் தேவையான மாற்று கருவுறுதல் விகிதம் 2.1 ஆகும். ஆனால், இந்தியாவின் தற்போதைய விகிதம் அதற்கும் கீழே சென்றுள்ளது.

குறிப்பாக, இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றவர்கள் உள்ளாட்சித் தேர்தல்களில் போட்டியிடத் தகுதியற்றவர்கள் என்ற விதிமுறை சில மாநிலங்களில் அமலில் உள்ளது. இதன் அடிப்படையில் மகாராஷ்டிராவைச் சேர்ந்த முன்னாள் கிராம ஊராட்சித் தலைவர் மங்கலா பீம்ராவ் இங்கிளே என்பவரின் தேர்தல் தகுதி ரத்து செய்யப்பட்டது. இதுதொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதிகள் பி.எஸ். நரசிம்மா மற்றும் அலோக் அராதே அடங்கிய அமர்வு, 2003-ம் ஆண்டு வழங்கப்பட்ட ஜாவேத் வழக்கின் தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய பெரிய அமர்வுக்கு பரிந்துரைத்துள்ளது.
மேலும், இரண்டு குழந்தைகள் விதிமுறை பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தையும், குழந்தை பெற்றுக்கொள்வது தொடர்பான தனிநபர் உரிமையையும் பாதிக்கக்கூடும் என நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. மக்கள் தொகை குறித்த மாறிவரும் சூழலுக்கு ஏற்ப சட்டங்கள் இருக்க வேண்டும் என்றும், கருவுறுதல் விகிதம் தொடர்ந்து குறைவதால் எதிர்காலத்தில் முதியோர் மக்கள் தொகை அதிகரித்து, வேலை செய்யும் வயதினரின் எண்ணிக்கை குறையக்கூடும் என்றும் எச்சரித்துள்ளது.
