செய்திகள்

குஜராத் அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு – தீபாவளி பரிசு அறிவிப்பு!

குஜராத் அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு – தீபாவளி பரிசு அறிவிப்பு!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு குஜராத் மாநில அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 3 சதவீத அகவிலைப்படி (DA) உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான முடிவு, முதல்வர் பூபேந்திர படேல் தலைமையில் நடைபெற்ற மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பின் மூலம் மாநில அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் என மொத்தம் சுமார் 9.69 லட்சம் பேர் பயனடைய உள்ளனர். இதில் 4.62 லட்சம் பணியில் உள்ள அரசு ஊழியர்களும், 5.07 லட்சம் ஓய்வூதியதாரர்களும் அடங்குவர். இந்த அகவிலைப்படி உயர்வு 2026 ஜூலை 1-ம் தேதி முதல் முன்தேதியிட்டு அமல்படுத்தப்பட உள்ளது.

ஏற்கனவே 60 சதவீதமாக இருந்த அகவிலைப்படி தற்போது 63 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், ஜூலை முதல் அக்டோபர் வரையிலான நான்கு மாத நிலுவைத் தொகை நவம்பர் மாத சம்பளம் மற்றும் ஓய்வூதியத்துடன் சேர்த்து வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக நிலுவைத் தொகையாக மட்டும் ரூ.523 கோடியை அரசு செலவிட உள்ளது. இந்த உயர்வால் மாநில அரசுக்கு ஆண்டுக்கு கூடுதலாக ரூ.1,569 கோடி நிதிச்சுமை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவம்பர் 9-ம் தேதியும் அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நவம்பர் 8 முதல் 11 வரை தொடர்ந்து நான்கு நாட்கள் அரசு ஊழியர்களுக்கு விடுமுறை கிடைக்க உள்ளது. இதற்குப் பதிலாக நவம்பர் 28-ம் தேதி வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.