செய்திகள்

ஊழியர்களுக்கு தீபாவளி பரிசாக ஐபோன் 16 வழங்கிய நிறுவனம்!

ஊழியர்களுக்கு தீபாவளி பரிசாக ஐபோன் 16 வழங்கிய நிறுவனம்!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு டெல்லியைச் சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று தனது ஊழியர்களுக்கு ஐபோன் 16 ஸ்மார்ட்போன்களைப் பரிசாக வழங்கியுள்ளது. இந்தச் சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் கவனம் பெற்று வருகிறது.

பண்டிகைக் காலங்களில் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்கு இனிப்புகள், புத்தாடைகள், போனஸ் மற்றும் பரிசுப் பொருட்களை வழங்குவது வழக்கம். ஆனால், இந்த நிறுவனம் தனது ஊழியர்களுக்கு விலையுயர்ந்த ஐபோன் 16-ஐ தீபாவளிப் பரிசாக வழங்கி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வேகமாகப் பரவி வருகிறது. அந்த வீடியோவுடன், “இங்கே போட்டிகள் இல்லை. உங்களுக்கு தீபாவளி பரிசாக என்ன கிடைத்தது?” என்ற கேள்வியும் எழுப்பப்பட்டுள்ளது.

இதையடுத்து, பலரும் அந்த நிறுவனத்தின் ஊழியர் நலனைப் பாராட்டி கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். அதேசமயம், சிலர் தங்களது நிறுவனங்களில் தீபாவளிப் பரிசாக எதுவும் வழங்கப்படவில்லை என்றும், கிடைத்த பரிசுகள் மிகவும் சாதாரணமானவை என்றும் நகைச்சுவையாகப் புலம்பி வருகின்றனர்.

ஊழியர்களின் உழைப்பை அங்கீகரிக்கும் வகையில் வழங்கப்பட்ட இந்த வித்தியாசமான தீபாவளிப் பரிசு இணையத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.