செய்திகள்

போலீசாரை மிரட்டியதாக புகார் – வேப்பேரி காவல் நிலையத்தில் சேகர்பாபு ஆஜர்!

போலீசாரை மிரட்டியதாக புகார் – வேப்பேரி காவல் நிலையத்தில் சேகர்பாபு ஆஜர்!

சென்னை வேப்பேரி காவல் நிலையத்தில் திமுக முன்னாள் அமைச்சர் சேகர்பாபு விசாரணைக்காக நேரில் ஆஜரானார்.

தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் மற்றும் பல்வேறு அரசு அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.100 கோடிக்கு மேல் முறைகேடாகப் பணம் வசூலித்ததாக எழுந்த புகாரில், முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் கைது செய்யப்பட்டார். அவரிடம் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் விசாரணை நடைபெற்றபோது, அங்கு வந்திருந்த சேகர்பாபு மற்றும் திமுக எம்.பி. கலாநிதி வீராசாமி ஆகியோர் காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

இந்தச் சம்பவம் தொடர்பான காணொளிகள் சமூக வலைதளங்களில் வெளியானதைத் தொடர்ந்து, சேகர்பாபு உள்ளிட்டோர் மீது போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்தல் மற்றும் மிரட்டல் தொடர்பான பிரிவுகளின் கீழ் வேப்பேரி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதையடுத்து, விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு சேகர்பாபுவுக்கு போலீசார் சம்மன் அனுப்பினர். அதன் அடிப்படையில், அக்டோபர் 30ஆம் தேதியான இன்று அவர் வேப்பேரி காவல் நிலையத்தில் ஆஜரானார். அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.