செய்திகள்

அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு – மெட்ரோ நகரங்களில் அரிசி விலை அதிகம்!

அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு – மெட்ரோ நகரங்களில் அரிசி விலை அதிகம்!

நாட்டின் முக்கிய மெட்ரோ நகரங்களான டெல்லி, மும்பை, கொல்கத்தா ஆகியவற்றுடன் ஒப்பிடும்போது சென்னையில் அரிசி உள்ளிட்ட சில அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகமாக இருப்பது தெரியவந்துள்ளது. இதனால் சென்னையில் குடும்பங்களின் மாதாந்திர செலவுகள் அதிகரித்துள்ளன.

மத்திய நுகர்வோர் நலத்துறை வெளியிட்டுள்ள அக்டோபர் 28ஆம் தேதி நிலவரப்படி, சென்னையில் ஒரு கிலோ அரிசி ரூ.80க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே நேரத்தில் டெல்லியில் ரூ.47க்கும், மும்பையில் ரூ.44க்கும், கொல்கத்தாவில் ரூ.59க்கும் விற்பனையாகிறது.

கோதுமையின் விலை சென்னையில் கிலோ ரூ.47 ஆக உள்ளது. டெல்லியில் ரூ.34க்கும், மும்பையில் ரூ.44க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கோதுமை மாவு சென்னையில் ரூ.42க்கு விற்பனையாகும் நிலையில், டெல்லியில் ரூ.35, மும்பையில் ரூ.48, கொல்கத்தாவில் ரூ.39 என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

காய்கறிகளைப் பொறுத்தவரை, சென்னையில் வெங்காயம் கிலோ ரூ.70க்கும், தக்காளி ரூ.50க்கும் விற்பனை செய்யப்படுகிறது. டெல்லி மற்றும் மும்பையுடன் ஒப்பிடும்போது தக்காளியின் விலையும் சென்னையில் அதிகமாக உள்ளது.

அதேவேளையில், சர்க்கரை, பருப்பு வகைகள் மற்றும் சமையல் எண்ணெய்களின் விலை மற்ற நகரங்களுடன் ஒப்பிடும்போது சென்னையில் குறைவாக இருப்பதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன.

காவிரி நீர் பற்றாக்குறையால் நெல் சாகுபடி பாதிக்கப்பட்டது, வரத்து குறைவு, போக்குவரத்து மற்றும் கூலிச் செலவுகள் அதிகரிப்பு ஆகியவை உணவுப் பொருட்களின் விலை உயர்வுக்கான காரணங்களாகக் கூறப்படுகின்றன.