காலை உணவு திட்டம் தொடங்கி 2 நாட்களே ஆன நிலையில்… பள்ளியில் அதிர்ச்சி சம்பவம்!
திருவள்ளூர் அருகே அரசு பள்ளியில் காலை உணவில் பல்லி இருந்ததாக புகார் எழுந்த நிலையில், உணவு சாப்பிட்ட 36 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் கொட்டையூரில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 1 முதல் 8-ம் வகுப்பு வரை 40-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.

இந்த நிலையில், இன்று காலை மாணவர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டுள்ளது. மாணவர்கள் உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, ஒரு மாணவரின் உணவில் பல்லி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து மாணவர்கள் உணவு சாப்பிடுவதை நிறுத்தியுள்ளனர். மேலும், உணவு சாப்பிட்ட மாணவர்களில் சிலருக்கு வாந்தி, மயக்கம் உள்ளிட்ட உடல்நலக் குறைவு ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
தொடர்ந்து, மாணவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணையும் நடைபெற்று வருகிறது.
இதனிடையே, நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கும் காலை உணவுத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டு தொடங்கப்பட்ட நிலையில், இரண்டு நாட்களிலேயே இந்த சம்பவம் நடந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
