செப். 28 முதல் 3 நாட்கள் வங்கி வேலைநிறுத்தம்! மத்திய அரசு ஊழியர்களுக்கு செப். 25-ல் சம்பளம்
செப்டம்பர் 28 முதல் 30ஆம் தேதி வரை நாடு முழுவதும் 3 நாட்கள் வங்கி வேலைநிறுத்தம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
United Forum of Bank Unions (UFBU) சார்பில் இந்த வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வங்கித்துறையின் அரையாண்டு கணக்கு முடிப்பு காலமும் இதே நேரத்தில் வருவதால், வங்கி சேவைகள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.
இதனை கருத்தில் கொண்டு, மத்திய அரசு ஊழியர்களின் செப்டம்பர் மாத சம்பளம், ஊதியம் மற்றும் ஓய்வூதியத்தை முன்கூட்டியே வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
அதன்படி, மத்திய அரசு ஊழியர்கள், பாதுகாப்புத்துறை, தபால் மற்றும் தொலைத்தொடர்புத்துறை உள்ளிட்ட ஊழியர்களுக்கான செப்டம்பர் மாத சம்பளம் மற்றும் ஓய்வூதியம் செப்டம்பர் 25ஆம் தேதி வெள்ளிக்கிழமை வழங்கப்பட உள்ளது.
மேலும், வங்கி வேலைநிறுத்தம் காரணமாக பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்பை குறைக்கும் வகையில், செப்டம்பர் 27ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையும் வங்கிக் கிளைகளை திறந்து செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
