செய்திகள்

“2030-க்குள் காசநோய் இல்லாத புதுச்சேரி!” – முதல்வர் ரங்கசாமி நம்பிக்கை !

“2030-க்குள் காசநோய் இல்லாத புதுச்சேரி!” – முதல்வர் ரங்கசாமி நம்பிக்கை !

வரும் 2030-ம் ஆண்டுக்குள் புதுச்சேரியை காசநோய் இல்லாத பிரதேசமாக மாற்ற முடியும் என முதல்வர் ரங்கசாமி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ஜிப்மரில் மரபணு வரிசைமுறை தொழில்நுட்பத்தை பயன்படுத்தி காசநோயாளிகளுக்கு மருந்து உணர்திறன் பரிசோதனை மேற்கொள்வது தொடர்பான 3 நாள் தேசிய மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டை முதல்வர் ரங்கசாமி தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் பேசிய அவர், இந்தியாவில் ஆண்டுதோறும் சுமார் 28 லட்சம் பேர் காசநோயால் பாதிக்கப்படுவதாக தெரிவித்தார். காசநோய் ஒழிப்பு மத்திய அரசின் முக்கிய இலக்குகளில் ஒன்றாக இருப்பதாகவும் கூறினார்.

புதுச்சேரியில் கடந்த ஆண்டுகளில் காசநோய் பாதிப்பு கணிசமாக குறைந்துள்ளதாகவும், 148 கிராமங்களில் 36 கிராமங்கள் ஏற்கெனவே காசநோய் இல்லாத கிராமங்களாக மாறியுள்ளதாகவும் முதல்வர் தெரிவித்தார். மேலும் பல கிராமங்களை காசநோய் இல்லாத கிராமங்களாக மாற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறினார்.

காசநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 நிதியுதவி வழங்கப்படுவதாகவும், தன்னார்வ அமைப்புகள் மூலம் ஊட்டச்சத்து உணவுகள் வழங்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

ஜிப்மர் இயக்குநர் டாக்டர் வீர் சிங் நேகி பேசுகையில், காசநோயாளிகளுக்கு மருந்து எதிர்ப்புப் பரிசோதனை மேற்கொள்வது முக்கியமானது என்றும், மருந்து எதிர்ப்பை முன்கூட்டியே கண்டறிவதன் மூலம் உரிய சிகிச்சையைத் தேர்வு செய்ய முடியும் என்றும் தெரிவித்தார்.

மேலும், அடுத்த தலைமுறை மரபணு வரிசைமுறை தொழில்நுட்பம் மூலம் மருந்து எதிர்ப்புடன் தொடர்புடைய மரபணு மாற்றங்களை கண்டறிந்து, சிகிச்சை முடிவுகளை மேம்படுத்த முடியும் என்றும் அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *