தடுப்பூசி முகாமில் இவ்வளவு அலட்சியமா?? : Paracetamol-க்கு பதில் Diabetes மாத்திரைகள் – ICUவில் 5 குழந்தைகள்..!!!
குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற அரசு ஆரம்ப சுகாதார நிலைய தடுப்பூசி முகாமில் பாராசிட்டமால் மாத்திரைக்கு பதிலாக நீரிழிவு நோய்க்கான மருந்துகள் வழங்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
குஜராத்தின் சூரத் நகரில் பல்சானா தாலுக்காவில் உள்ள கனவ் ஆரம்ப சுகாதார மையத்தின் கீழ் வரும் பல்சானா துணை மையத்தில், செப்டம்பர் 23 அன்று நடைபெற்ற ‘மம்தா திவாஸ்’ தடுப்பூசி முகாமின் போது இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இந்தத் துணை மையத்தில் மொத்தம் ஏழு குழந்தைகளுக்குத் தடுப்பூசி போடப்பட்டது. இவர்களில், ஐந்து குழந்தைகளுக்கு நீரிழிவு நோய்க்குப் பரிந்துரைக்கப்படும் கிளிமெபிரைடு என்ற மருந்து தவறாக வழங்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தடுப்பூசிக்குப் பிறகு, குழந்தைகளுக்கு வழக்கமாகக் காய்ச்சல், வலி போன்றவை ஏற்படும். இதற்காக, பாராசிட்டமால் மாத்திரைகள் வழங்கப்படும். ஆனால், அதற்குப் பதிலாக கிளிமெபிரைடு 2 MG வழங்கப்பட்டுள்ளது.
இதனை உட்கொண்ட குழந்தைகள் டல்நிலை மோசமடைந்ததை அடுத்து, ஐந்து குழந்தைகளும் செப்டம்பர் 24 அன்று மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் (ICU) அனுமதிக்கப்பட்டனர். இந்தச் சம்பவத்தை தொடர்ந்து பெண் சுகாதாரப் பணியாளர் இந்துபென் ரத்திலால் சௌத்ரி இடைநீக்கம் செய்யப்பட்டார். அவர் மீது துறை ரீதியான விசாரணையும் தொடங்கப்பட்டுள்ளது.

விசாரணை அறிக்கை கிடைத்த பிறகு அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று குஜராத் சுகாதார அமைச்சர் பிரபுல் பஞ்சஷேரியா கூறினார். பாதிக்கப்பட்ட குழந்தைகளில் மூன்றரை மாத மற்றும் ஒரு வயது குழந்தைகளும் அடங்குவர் என்றும், குழந்தைகளுக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு, தற்போது அவர்களின் உடல்நிலை சீராக உள்ளது என்றும் அமைச்சர் மேலும் கூறினார்.

துறை ரீதியான நடவடிக்கைகள் நடைபெற்று வருவதாகவும், அரசு விதிகளின்படி இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். குழந்தைகள் விசயத்தில் இவ்வளவு அலட்சியம் காட்டுவதா என பலர் சமூக வலைதளங்களில் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்
