செய்திகள்

பி.டி.ஆர். தாயாரிடம் ஆசி பெற்ற விஜய்.. மீனாட்சி அம்மன் கோவிலில் நடந்த நிகழ்வு

பி.டி.ஆர். தாயாரிடம் ஆசி பெற்ற விஜய்.. மீனாட்சி அம்மன் கோவிலில் நடந்த நிகழ்வு

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் நடைபெற்ற ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டத்தின் தொடக்க விழாவில் பங்கேற்ற முதலமைச்சர் விஜய், தொடர்ந்து மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். சமீபத்தில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு கோவிலில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்ற நிலையில், முதலமைச்சரின் வருகை நடைபெற்றது.

முதலமைச்சர் விஜய் கோவிலுக்கு வந்தபோது, கோவில் நிர்வாகம் சார்பில் அவருக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. அறங்காவலர் குழுத் தலைவர் ருக்மணி பழனிவேல் ராஜன், முதலமைச்சரை வரவேற்று பொன்னாடை அணிவித்தார்.

இதையடுத்து, முதலமைச்சர் விஜயும் ருக்மணி பழனிவேல் ராஜனுக்கு பொன்னாடை அணிவித்து, அவரது காலில் விழுந்து ஆசி பெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ருக்மணி பழனிவேல் ராஜன், முன்னாள் அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் தாயார் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேக அழைப்பிதழில் அறங்காவலர் குழு பெயர் இடம்பெறாதது தொடர்பாக ருக்மணி பழனிவேல் ராஜன் கருத்து தெரிவித்திருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன. இந்த பின்னணியிலும், முதலமைச்சர் விஜய் அவரை நேரில் சந்தித்து ஆசி பெற்ற நிகழ்வு கவனம் பெற்றுள்ளது.

முதலமைச்சர் விஜயின் மதுரை பயணத்தில் மீனாட்சி அம்மன் கோவில் தரிசனம் முக்கிய நிகழ்வாக அமைந்தது. கோவிலுக்குச் செல்லும் வழியிலும் பொதுமக்கள் சாலையின் இருபுறங்களிலும் திரண்டு அவருக்கு வரவேற்பு அளித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *