செய்திகள்

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்த முதலமைச்சர் விஜய் !

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்த முதலமைச்சர் விஜய்

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் இன்று மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்தார். முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு அவர் மதுரைக்கு மேற்கொண்ட முதல் அதிகாரப்பூர்வ பயணத்தின் ஒரு பகுதியாக இந்த கோவில் வழிபாடு நடைபெற்றது.

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டத்தை தொடங்கி வைத்த முதலமைச்சர் விஜய், தொடர்ந்து புதுப்பிக்கப்பட்ட காந்தி நினைவு அருங்காட்சியகத்தை திறந்து வைத்தார். இதையடுத்து, மதுரை சுற்றுலா மாளிகையில் இருந்து திறந்த வாகனத்தில் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு புறப்பட்டார்.

முதலமைச்சரின் வருகையையொட்டி, கோவில் நிர்வாகம் சார்பில் அவருக்கு பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. அமைச்சர்கள் ஆனந்த், அருண்ராஜ், நிர்மல் குமார், ரமேஷ் உள்ளிட்டோரும் அவருடன் கோவிலுக்கு சென்றனர்.

கோவிலுக்குள் சென்ற முதலமைச்சர் விஜய், மீனாட்சி அம்மன் மற்றும் சுந்தரேஸ்வரரை தரிசனம் செய்தார். தொடர்ந்து சிறப்பு பூஜைகளிலும் பங்கேற்ற அவர், பொற்றாமரைக் குளத்தையும் வலம் வந்து வழிபாடு மேற்கொண்டார்

மீனாட்சி அம்மன் கோவிலில் அண்மையில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றிருந்த நிலையில், கோவில் வளாகத்தில் புதுப்பிக்கப்பட்ட பகுதிகளையும் முதலமைச்சர் பார்வையிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முதலமைச்சரின் கோவில் வருகையை முன்னிட்டு மதுரை நகரின் முக்கிய சாலைகள் மற்றும் கோவில் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அவர் கோவிலுக்குச் சென்றபோதும், வழிபாடு முடித்து திரும்பியபோதும் சாலையின் இருபுறங்களிலும் திரண்டிருந்த மக்கள் அவருக்கு வரவேற்பு அளித்தனர்.

மதுரை பயணத்தின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றாக மீனாட்சி அம்மன் கோவில் தரிசனம் அமைந்துள்ளது. முன்னதாக திட்டமிடப்பட்டிருந்தபடி, மாலை நேரத்தில் நடைபெற்ற சாயரட்சை பூஜையிலும் முதலமைச்சர் பங்கேற்று அம்மனை தரிசனம் செய்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *