செய்திகள்

விஜய்யின் ‘அந்த’ கேள்வி.. பகத் பாசிலின் வாழ்க்கையில் மறக்க முடியாத தருணம்!

விஜய்யின் ‘அந்த’ கேள்வி.. பகத் பாசிலின் வாழ்க்கையில் மறக்க முடியாத தருணம்!

நடிகர் பகத் பாசில், தனது சிறுவயது நினைவுகள் மற்றும் சினிமா பயணம் குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துள்ளார்.

பகத் பாசில் தனது தந்தையும் இயக்குநருமான ஃபாசில் இயக்கிய கையெத்தும் தூரத்து திரைப்படம் மூலம் 2002-ம் ஆண்டு நடிகராக அறிமுகமானார். ஆனால், முதல் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாததால், பகத் சினிமாவில் இருந்து விலகி அமெரிக்கா சென்றார். அங்கு பொறியியல் படிக்கச் சென்ற அவர், பின்னர் தத்துவவியல் படித்ததாக தெரிவித்துள்ளார்.

பல ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு மீண்டும் சினிமாவுக்கு திரும்பிய பகத், தனது தனித்துவமான நடிப்பால் மலையாளம் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளிலும் கவனம் பெற்றார்.

இந்நிலையில், இயக்குநர் கே.எஸ். ரவிகுமார் உடனான உரையாடலில் தனது சிறுவயது நினைவுகளை பகிர்ந்த பகத் பாசில், நடிகர் விஜய்யை முதன்முதலில் காதலுக்கு மரியாதை படப்பிடிப்பில் சந்தித்ததாக கூறியுள்ளார்.

அப்போது தனக்கு 12 அல்லது 13 வயது இருக்கும் என்றும், அந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தனது வீட்டில்தான் நடைபெற்றதாகவும் பகத் தெரிவித்துள்ளார். மேலும், “நான் ஒரு நடிகனாவேனா என்று முதன்முதலில் என்னிடம் கேட்டவர் விஜய் சார்தான்” என அவர் நினைவுகூர்ந்துள்ளார்.

அந்த காலகட்டத்தில் விஜய் தன்னுடன் சினிமா குறித்த பல விஷயங்களை பேசியதாகவும், குறிப்பாக குஷி திரைப்படத்தின் கதைக்கருத்தை தன்னிடம் பகிர்ந்துகொண்டதாகவும் பகத் தெரிவித்துள்ளார்.

தனது முதல் படத்தின் தோல்வி குறித்து பேசிய பகத், அந்த அனுபவம் தன்னை மிகவும் பாதித்ததாகவும், அதன் காரணமாக சிறிது காலம் சினிமாவில் இருந்து விலகி இருக்க விரும்பியதாகவும் கூறியுள்ளார். பின்னர் அமெரிக்காவில் இருந்தபோது பல்வேறு வெளிநாட்டு திரைப்படங்களை பார்த்தது, மீண்டும் சினிமாவுக்கு திரும்ப வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஒரு படத்திற்காக மட்டும் திரும்பி வந்ததாக நினைத்த நிலையில், தற்போது தனது 66வது திரைப்படம் வெளியாகும் அளவுக்கு தனது சினிமா பயணம் தொடர்ந்திருப்பதாகவும் பகத் பாசில் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *