செய்திகள்

துல்கர் சல்மான் பெயரில் போலி X கணக்கு.. ரசிகர்களுக்கு முக்கிய எச்சரிக்கை!

துல்கர் சல்மான் பெயரில் போலி X கணக்கு.. ரசிகர்களுக்கு முக்கிய எச்சரிக்கை!

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான துல்கர் சல்மானுக்கு தமிழிலும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில், தனது பெயரை தவறாக பயன்படுத்தி சமூக வலைதளத்தில் ஒருவர் செயல்பட்டு வருவதாக நடிகர் துல்கர் சல்மான் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், தனது பெயரில் போலியான ‘எக்ஸ்’ கணக்கு தொடங்கப்பட்டுள்ளதாகவும், அது தனது உண்மையான கணக்கு இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். அந்த போலி கணக்கை யாரும் நம்ப வேண்டாம் எனவும் ரசிகர்களை அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும், அந்த நபர் தன்னைப் போல பல்வேறு பதிவுகளுக்கு கருத்து தெரிவித்து வருவதாகவும் துல்கர் சல்மான் தெரிவித்துள்ளார். குறிப்பாக திரைப்படங்கள் குறித்தும், நடிகர்கள் குறித்தும் பதிவிடுவது மட்டுமின்றி, தனது குடும்பத்தினருக்கு வாழ்த்து செய்திகள் அனுப்புவது உள்ளிட்ட செயல்களிலும் அந்த நபர் ஈடுபட்டு வருவதாக அவர் கூறியுள்ளார்.

தனது பெயரை தவறாக பயன்படுத்தி இதுபோன்று செயல்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது எனக் கூறியுள்ள துல்கர் சல்மான், இதுதொடர்பாக ஏற்கனவே புகார் அளித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

ஆனால், புகார் அளித்தும் இதுவரை ‘எக்ஸ்’ நிறுவனத்திடமிருந்து எந்த பதிலும் கிடைக்கவில்லை என்றும் அவர் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

துல்கர் சல்மானின் இந்த பதிவு தற்போது சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது. ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் அவரது பெயரில் செயல்படும் போலி கணக்குகளை நம்பாமல், அதிகாரப்பூர்வ சமூக வலைதள கணக்குகளை மட்டுமே பின்தொடர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *