செய்திகள்

புரட்டாசி கிருத்திகை.. வல்லக்கோட்டை முருகன் கோயிலில் குவிந்த பக்தர்கள்!

புரட்டாசி கிருத்திகை.. வல்லக்கோட்டை முருகன் கோயிலில் குவிந்த பக்தர்கள்!

காஞ்சிபுரம் மாவட்டம் வல்லக்கோட்டை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் புகழ்பெற்ற முருகன் திருத்தலங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. திருப்பெரும்புதூர் அருகே அமைந்துள்ள இக்கோயில், இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. ஆயிரம் ஆண்டுகளுக்கும் முற்பட்ட பழமையான இத்தலம், அருணகிரிநாதரால் திருப்புகழில் பாடப்பெற்ற சிறப்பையும் பெற்றுள்ளது.

புரட்டாசி கிருத்திகையை முன்னிட்டு கோயிலில் இன்று அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அதிகாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, முதலில் கோ பூஜை நடைபெற்றது. தொடர்ந்து மூலவர் சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

இதையடுத்து முருகப்பெருமானுக்கு சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. புரட்டாசி மாதத்தை முன்னிட்டு பத்தி மாலை அணிவிக்கப்பட்டு, சந்தனக்காப்பு அலங்காரத்தில் வெங்கடேசப் பெருமாள் அலங்காரத்தில் காட்சியளித்த முருகப்பெருமானை பக்தர்கள் “அரோகரா” என பக்தி முழக்கமிட்டு தரிசனம் செய்தனர்.

தொடர்ந்து சஷ்டி மண்டபத்தில் உற்சவர் சுப்பிரமணிய சுவாமிக்கு பால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் கிருத்திகை சிறப்பு யாகமும் நடைபெற்றது.

முருகப்பெருமானுக்கு உகந்த கிருத்திகை நாளையொட்டி அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு வருகை தந்தனர். நீண்ட வரிசையில் சுமார் ஒரு மணி நேரம் வரை காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். பக்தர்களின் வசதிக்காக குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை கோயில் நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்தது.

மேலும், பக்தர்களுக்கு கோயில் சார்பில் கதம்பசாதம் அன்னதானம் வழங்கப்பட்டது. கோயில் வெளிப்புற வளாகத்தில் தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சார்பில் சிறப்பு மருத்துவ முகாமும் அமைக்கப்பட்டிருந்தது. இதில் பக்தர்களுக்கு இலவச மருத்துவப் பரிசோதனை மற்றும் சிகிச்சை வழங்கப்பட்டது.

இதனால் வல்லக்கோட்டை முருகன் கோயில் முழுவதும் பக்தர்கள் கூட்டத்தால் களைகட்டியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *